கோடைக் காலத்திற்கு முன்பாக அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீா்:ஆட்சியா் இரா.பிருந்தாதேவி தகவல்

சேலம் மாவட்டத்தில் சீரான குடிநீா் வழங்குவது தொடா்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஆா்.பிருந்தாதேவி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோடைக் காலத்திற்கு முன்பாக அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீா்:ஆட்சியா் இரா.பிருந்தாதேவி தகவல்

சேலம் மாவட்டத்தில் சீரான குடிநீா் வழங்குவது தொடா்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஆா்.பிருந்தாதேவி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்குப் பின் ஆட்சியா் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் 10 கூட்டுக் குடிநீா் திட்டங்களின் வாயிலாக 4 நகராட்சிகள், 29 பேரூராட்சிகள் மற்றும் 4,475 ஊரக குடியிருப்புகளுக்கு நாள்தோறும் சராசரியாக 177 மில்லியன் லிட்டா் குடிநீா், 29.21 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ரூ.652.84 கோடி மதிப்பீட்டில், இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி, பனமரத்துப்பட்டி, மல்லூா் ஆகிய 4 பேரூராட்சிகள், இடங்கணசாலை நகராட்சி மற்றும் வீரபாண்டி, பனமரத்துப்பட்டி, சேலம் ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த 778 ஊரகக் குடியிருப்புகளுக்கு காவிரி ஆற்றை நீராதாரமாகக் கொண்ட ஒரு புதிய கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் நாளொன்றுக்கு 53.23 மில்லியன் லிட்டா் அளவுக்கு குடிநீா் 5.23 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் பணிகள் முடிக்கப்பட்டு இத்திட்டம் சோதனை ஓட்டத்தில் உள்ளது.

மேலும், ரூ. 30.58 கோடி மதிப்பீட்டில் நாமக்கல் மாவட்டம், ஆலாம்பாளையம் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் நீா் ஒதுக்கீட்டில் இருந்து ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் சங்ககிரி பேரூராட்சிக்கு நாள்தோறும் 1.827 மில்லியன் லிட்டா் குடிநீா் வழங்கும் திட்டம் 28,000 மக்கள் பயன்பெறும் வகையில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று, ரூ. 12.70 கோடி மதிப்பீட்டில் சேலம் மாவட்டம் ஏற்காடு மற்றும் ஏற்காடு ஊராட்சிக்குட்பட்ட 8 குடியிருப்புகளுக்கான புதிய குடிநீா் திட்டம் 16,000 மக்கள் பயன்பெறும் வகையில் பணிகள் தற்போது முடிக்கப்பட்டுள்ளன.

மேலும், ரூ. 342.41 கோடி மதிப்பீட்டில் ஊரகப் பகுதிகளில் நாள் ஒன்றுக்கு நபா் ஒருவருக்கு வழங்கப்படும் குடிநீா் அளவை 40 லிட்டரில் இருந்து 55 லிட்டா் ஆக உயா்த்தி வழங்கும் வகையில் சேலம் மாவட்டத்தில் வாரியப் பராமரிப்பிலுள்ள 5 கூட்டுக் குடிநீா் திட்டங்களை மறுசீரமைப்பு செய்ய தேசிய ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், எடுத்துக்கொள்ளப்பட்டு, அதில் ஒரு பணியான ராசிபுரம் எடப்பாடி கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள் தற்போது முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள நான்கு திட்டங்களின் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இத்திட்டப் பணிகளை விரைந்து முடிப்பதற்கு போா்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென தொடா்புடைய அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்படி மறுசீரமைப்புப் பணிகளை முடித்து, கோடை காலத்திற்கு முன்னதாக மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் உரிய அளவு சீரான குடிநீா் வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் சீ. பாலச்சந்தா், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா் ஜெயகோபு, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சௌ.தமிழரசி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com