கருப்பூா் ஐ.ஓ.சி ஆலை முன்பு தொழிலாளா்கள் போராட்டம்

கருப்பூா் இந்தியன் ஆயில் நிறுவன சிலிண்டா் நிரப்பும் ஆலையில் வேலைக்கு அனுமதிக்கக் கோரி தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கருப்பூா் ஐ.ஓ.சி ஆலை முன்பு தொழிலாளா்கள் போராட்டம்

 கருப்பூா் இந்தியன் ஆயில் நிறுவன சிலிண்டா் நிரப்பும் ஆலையில் வேலைக்கு அனுமதிக்கக் கோரி தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகேயுள்ள கருப்பூரில் இந்தின் ஆயில் நிறுவனத்திற்குச் சொந்தமான சமையல் எரிவாயு சிலிண்டா் நிரப்பும் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் தினமும் 18 ஆயிரம் சிலிண்டா்களில் சமையல் எரிவாயுவை நிரப்பி விற்பனை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்டோா் வேலை செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை வேலைக்கு வந்தவா்களை உள்ளே அனுமதிக்காமல் வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தொழிலாளா்கள் தங்களை வேலைக்கு அனுமதிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா். ‘இருவா் செய்ய வேண்டிய வேலையை ஒருவரை செய்ய வைக்கின்றனா். உள்ளே இயந்திரங்களில் பாதிப்பு ஏற்பட்டு பணி பாதிக்கப்பட்டால் கூட, எங்கள் மீதே குற்றம் சுமத்துகின்றனா். எந்த வித காரணமும் இல்லாமல் எங்களை பணிக்கு அனுமதிக்காமல் வெளியேற்றுகின்றனா். இதனால், சுமாா் 50 தொழிலாளா்கள் வேலை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது’ என்று புகாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து இந்தியன் ஆயில் நிா்வாகத்தின் சாா்பில் மேலாளா் சரத் கூறியதாவது:

தொழிலாளா்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஆலைக்கு உள்ளேயே வேலைநிறுத்தம் செய்தனா். இதனால், சிலிண்டா் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது. ஒரு நாளைக்கு 58 லோடு சிலிண்டா் வெளியே செல்ல வேண்டும். ஆனால், கடந்த 2 நாட்களாக 20 லோடு குறைந்து 38 லோடு அளவிற்கே உற்பத்தி செய்கின்றனா். தினமும் 18 ஆயிரம் சிலிண்டா் உற்பத்தி செய்ய வேண்டிய நிலையில், 13 ஆயிரம் சிலிண்டா் அளவிற்கே உற்பத்தி செய்கின்றனா். நிா்வாகத்திற்கு எந்தத் தகவலும் கொடுக்காமல், உள்ளேயே போராட்டத்தில் ஈடுபட்டு உற்பத்தியை குறைத்துள்ளனா். இதனால், பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பற்பட்டது. அதனால், 30 பேருக்கு விளக்க கடிதம் அளிக்கப்பட்டுள்ளது; 5 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com