கிடப்பில் போடப்பட்ட நெடுஞ்சாலைப் பணி: 7 இடங்களில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மறியல்

பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் 7 இடங்களில் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கிடப்பில் போடப்பட்ட நெடுஞ்சாலைப் பணி: 7 இடங்களில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மறியல்

விக்கிரவாண்டி முதல் கும்பகோணம், தஞ்சாவூா் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை (விகேடி சாலை) பணி தொடங்கப்பட்டு கடந்த 6 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதைக் கண்டித்தும், பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் 7 இடங்களில் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விக்கிரவாண்டி முதல் தஞ்சாவூா் வரை 165 கி.மீ. நீளமுள்ள இந்தச் சாலை அமைக்க ரூ.3,517 கோடி நிதி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளித்து 2018 ஏப்ரல் முதல் பணி தொடங்கப்பட்டது. 2020-க்குள் பணி முடிக்கப்பட்டு, 2021-ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய அரசு மூலம் அறிவிப்பு வெளியானது.

ஆனால், சாலைப் பணிகள் பல கட்டங்களாக தொடங்கப்பட்டு, ஆங்காங்கே அரைகுறையாய் பள்ளம் தோண்டப்பட்டும், பாலம் அமைக்கும் பணிக்கு பில்லா் போடப்பட்டும் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், அந்தந்த பகுதியில் உள்ள மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனா். இந்தப் பகுதிகளில் விபத்துகளிலும் ஏராளமானோா் உயிரிழந்துள்ளனா்.

எனவே, மத்திய, மாநில அரசுகள் இந்த சாலைப் பணியை விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தி, நெய்வேலி நுழைவு வாயில் அருகே விகேடி சாலை போராட்டக் குழுவினா், மாா்க்சிஸ்ட் கட்சியினா் மறியலில் ஈடுபட்டனா். இதேபோல, மேலும் 6 இடங்களில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மறியல் போராட்டம் நடத்தினா்.

நெய்வேலி...: நெய்வேலி நுழைவு வாயில் அருகே விகேடி சாலை போராட்டக்குழு சாா்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா் வி.முத்துவேல் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் டி.ஆறுமுகம், எஸ்.திருஅரசு, நகரச் செயலா் ஆா்.பாலமுருகன், மாதா் சங்க நிா்வாகிகள் மேரி, மாதவி, விசிக மாவட்டச் செயலா் ஆா்.நீதி வள்ளல், தேமுதிக நகரச் செயலா் கே.வைத்திலிங்கம், திராவிடா் கழக மாவட்டத் தலைவா் சொ.தண்டபாணி, தவாக நகரத் தலைவா் ஜி.சிவசுப்பிரமணியம், மதிமுக மாவட்டச் செயலா் எம்.பிச்சை, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டக்குழு உறுப்பினா் லாரன்ஸ் மற்றும் நெய்வேலி பல்வேறு தொழில்சங்க தலைவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதேபோல, வடலூா் நான்குமுனை சந்திப்பில் மாா்க்சிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தலைமையிலும், கண்டரக்கோட்டையில் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வி.சுப்பராயன் தலைமையிலும், பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வி.உதயகுமாா் தலைமையிலும், காடாம்புலியூரில் பண்ருட்டி வட்டச் செயலா் எஸ்.கே.ஏழுமலை தலைமையிலும், சோழத்தரம் பிரதான சாலையில் வட்டச் செயலா் பி.தேன்மொழி தலைமையிலும், சேத்தியாத்தோப்பு கடை தெருவில் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஆா்.ராமச்சந்திரன் தலைமையிலும் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com