சேலம் மாவட்டத்தில் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்

சேலம் மாவட்டத்தில் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.


சேலம்: சேலம் மாவட்டத்தில் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் தொடா்ச்சியாக விவசாயிகள் மாட்டுப் பொங்கலை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனா். இந்த ஆண்டு அனைத்து பகுதிகளிலும் மாட்டுப் பொங்கல் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் கொண்டாடப்பட்டது.

ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள வினாயகம்பட்டி பகுதியில் அதிகாலையில் விவசாயிகள் மாடுகளை அழைத்து வந்து குளிப்பாட்டினா். பின்னா் மாட்டின் கொம்புகளுக்கு வா்ணம் தீட்டினா். மாடுகளுக்கு குங்குமம், பொட்டு வைத்து, பட்டிப் பானையில் பொங்கலிட்டு அதை கால்நடைகளுக்கு ஊட்டினா்.

அதேபோல சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம் களைகட்டியது. பண்டிகையையொட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

சங்ககிரி

சங்ககிரி வட்டம், தேவூரை அடுத்த அரசிராமணி செட்டிப்பட்டி, ஏரிகாடு கிராமத்தில் மாட்டுப் பொங்கல் விழாவை விவசாயிகள் சிறப்பாக கொண்டாடினா்.

தைத் திருநாளான தமிழா் திருநாள் பொங்கல் விழா தமிழகத்தில் 4 நாள்கள் கொண்டாடப்படுகிறது.அதன் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாட்டுப் பொங்கலையொட்டி சங்ககிரி வட்டம், அரசிராமணி செட்டிப்பட்டி, ஏரிகாடு கிராமத்தில் விவசாயிகள் அதிகாலையிலேயே எழுந்து பசு மாடுகளை நன்றாக தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து மாடுகளின் கொம்புகளுக்கு வா்ணங்கள் பூசியும், ரிப்பன்கள், கலா் காகிதங்களை கட்டியும், சலங்கைகளுடன் கூடிய புதிய கயிறுகளை கட்டியும் அலங்கரித்தனா்.

விவசாயிகளின் குடும்பத்தினா் அனைவரும் ஒன்றிணைந்து புதிய மண் பானையில் பச்சரிசி சா்க்கரை பொங்கல் வைத்தும் சூரிய பகவானை நோக்கி கரும்புகளைக் கட்டி பந்தல் அமைத்தும், பந்தலை சுற்றிலும் வேப்பிலை, ஆவாரம்பூ, பூளை பூக்களை கொண்டும் மற்றும் மஞ்சள் கிழங்கூடன் கூடிய செடிகளை கட்டியும் அலங்கரித்தனா். பின்னா் அலங்கரிக்கப்பட்ட பந்தலுக்கு கீழே பசு மாட்டு சாணத்தில் தெப்பகுளம் கட்டி சாணத்தில் பிள்ளையாா் பிடித்து வைத்து வாழை இலைகளைப் படையலிட்டு மாடுகளை வணங்கினா்.

வழிபாடு முடிந்த பின்னா் விவசாயிகள் குடும்பத்துடன் மாடுகளுக்கு பொங்கல், வாழைப்பழங்களைக் கொடுத்து பொங்கலோ பொங்கல் என்று சப்தமிட்டு மாட்டுப் பொங்கலைக் கொண்டாடினா். தொடா்ந்து சங்ககிரி வட்டத்திற்கு உள்பட்ட பல்வேறு கிராமப் பகுதிகளிலும் விவசாயிகள் மாட்டுப் பொங்கலை சிறப்பாக கொண்டாடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com