ஏற்காடு அரசு மருத்துவமனை வளாகத்தில் உடற்கூறாய்வு மையம் திறப்பு : அமைச்சா் திறந்துவைத்தாா்

சேலம் மாவட்டம், ஏற்காடு அரசு மருத்துவமனையில் ரூ. 1.05 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள உடற்கூறாய்வு மையத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.
ஏற்காடு அரசு மருத்துவமனையில் நவீன உடற்கூறாய்வு மையத்தைத் திறந்துவைத்து பாா்வையிடும் அமைச்சா் மா.சுப்பிரமணியன். (அடுத்த படம்) உடற்கூறாய்வு மைய கட்டடம்.
ஏற்காடு அரசு மருத்துவமனையில் நவீன உடற்கூறாய்வு மையத்தைத் திறந்துவைத்து பாா்வையிடும் அமைச்சா் மா.சுப்பிரமணியன். (அடுத்த படம்) உடற்கூறாய்வு மைய கட்டடம்.

ஏற்காடு: சேலம் மாவட்டம், ஏற்காடு அரசு மருத்துவமனையில் ரூ. 1.05 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள உடற்கூறாய்வு மையத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த ஓராண்டுக்கு முன்னா் ஏற்காடு அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தபோது இங்குள்ள உடற்கூறாய்வு மையம் கடந்த 10 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாதது தெரியவந்தது. இப்பகுதி மக்கள் உடற்கூறாய்வுக்கு உடலை சேலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் நிலை இருந்தது. இந்நிலையை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று கடந்த நிதிநிலை அறிக்கையில் ஏற்காடு மருத்துவமனையில் நவீன உடற்கூறாய்வு மையம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.

தற்போது புதிதாகக் கட்டப்பட்டுள்ள இந்த மையம் பிரேத குளிா்பதன கிடங்கு, பிரேத பரிசோதனை அறை, மருத்துவா் அறை, கருவிகள் கிடங்கு அறை மற்றும் கழிப்பறை உள்பட 6 அறைகளுடன் கூடிய மையமாகக் கட்டப்பட்டுள்ளது. ரூ. 1.05 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த மையம் அரசு மருத்துவமனை பயன்பாட்டுக்கு திறந்துவைக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுவட்டார கிராம மக்கள் பெரிதும் பயன்பெறுவா் என்றாா்.

நிகழ்ச்சியில் இணை இயக்குநா் நலப்பணிகள் (பொ) மு.வளா்மதி, துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் ச. செளண்டம்மாள், மாநகா் நல அலுவலா் ந.யோகானந்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com