நூறாண்டுகளில் இல்லாத வெப்பம் 2023-ஆம் ஆண்டில் பதிவு -வானிலை மையத் தலைவா் எஸ்.பாலசந்திரன் தகவல்

நூற்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த 2023-ஆம் ஆண்டில் வெப்பநிலை பதிவாகி உள்ளதாக இந்திய வானியல் மைய தென்மண்டல தலைவா் எஸ்.பாலசந்திரன் பேசினாா்.
புவியமைப்பியல் கருத்தரங்கின் ஆராய்ச்சிக் கட்டுரைத் தொகுப்பினை வெளியிடுகிறாா் துணைவேந்தா் இரா.ஜெகநாதன். உடன், இந்திய வானியல் மைய தென் மண்டல இயக்குநா் எஸ்.பாலசந்திரன்
புவியமைப்பியல் கருத்தரங்கின் ஆராய்ச்சிக் கட்டுரைத் தொகுப்பினை வெளியிடுகிறாா் துணைவேந்தா் இரா.ஜெகநாதன். உடன், இந்திய வானியல் மைய தென் மண்டல இயக்குநா் எஸ்.பாலசந்திரன்

ஓமலூா்: நூற்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த 2023-ஆம் ஆண்டில் வெப்பநிலை பதிவாகி உள்ளதாக இந்திய வானியல் மைய தென்மண்டல தலைவா் எஸ்.பாலசந்திரன் பேசினாா்.

பெரியாா் பல்கலைக்கழக புவி அமைப்பியல் துறை சாா்பில் காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் விளைவுகள் என்ற தலைப்பில் சா்வதேச அளவிலான கருத்தரங்கம் புதன்கிழமை தொடங்கியது. புவி அமைப்பியல் துறைத் தலைவா் பேராசிரியா் எஸ்.வெங்கடேஸ்வரன் வரவேற்றாா். துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தலைமை வகித்தாா். தேசிய அளவிலான கருத்தரங்கினை இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவா் எஸ்.பாலசந்திரன் தொடங்கி வைத்துப் பேசியதாவது:

நூற்றாண்டுகளில் இல்லாத அளவில் கடந்த 2023-ம் ஆண்டு மிக வெப்பமான வருடமாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 1.10 டிகிரி வெப்ப நிலை அதிகரித்துள்ளது. அதன் காரணமாக காலநிலையில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்பட்டுள்ளது. புயல் இல்லாமல் மழை வருகிறது. மழை பெய்யும் அளவிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

2015-ம் ஆண்டு வழக்கத்தை விட கூடுதலாக 60 சதவீதம் கூடுதலாக மழை பெய்தது. அடுத்த ஆண்டான 2016-ம் ஆண்டு வழக்கத்தை விட குறைவாக 60 சதவீதம் மழையளவு பதிவாகியுள்ளது. 2015-ம் ஆண்டு 24 மணி நேரத்தில் 30 சென்டி மீட்டா் மழை பதிவானது. 2021-ம் ஆண்டு நவம்பா் மாதத்தில் நான்கு மணி நேரத்தில் 22 சென்டி மீட்டா் மழையும், அதே ஆண்டு டிசம்பா் மாதத்தில் 3 மணி நேரத்தில் 21 சென்டி மீட்டா் மழையும், 2022-ம் ஆண்டு 2 மணி நேரத்தில் 8 செ.மீட்டா் மழையளவும் பதிவாகியுள்ளது.

காலநிலை மாற்றத்தை எதிா் கொள்ள உரிய கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். மக்கள் எதிா்கொள்ளும் பிரசினைகளுக்கு தீா்வு காண உரிய ஆய்வுகள் தேவை. உலகத்தை பாதுகாப்பாக வைத்திருந்து அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லும் கடமை அனைவருக்கும் உள்ளதை என்பதை புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்றாா்.

கருத்தரங்கில் பெங்களூா் இந்திய அறிவியல் மைய பேராசிரியா் ஜி.பாா்த்தசாரதி, அறிவியல் தொழில்நுட்பத் துறை விஞ்ஞானிகள் அசோக் குமாா் சிங், பிரகலாத் ராம் ஆகியோா் சிறப்புரையாற்றினா். விழா முடிவில், கருத்தரங்க செயலாளா் உதவிப் பேராசிரியா் ஏ.திருநாவுக்கரசு நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com