தைப்பூச விழா: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

தைப்பூச விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் முருகன் கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெற்றது.

தைப்பூச விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் முருகன் கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெற்றது.

சேலம், ஊத்துமலை முருகன், காவடி பழனியாண்டவா், குமரகிரி தண்டாயுதபாணி, சித்தா் கோயில், கந்தாஸ்ரமம், அழகாபுரம் முருகன் கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் மூலவா், உற்சவா் முருகன், வள்ளி, தெய்வானைக்கு பால், தயிா், இளநீா், பன்னீா், பஞ்சாமிா்தம், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பக்தா்கள் காவடி எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா். தைப்பூசத்தை முன்னிட்டு சில கோயில்களில் தேரோட்டம் நடைபெற்றது. மேலும், பெண்கள் பால்குடம் ஊா்வலமாக எடுத்து வந்தனா். சேலத்தில் முருகன் கோயில்கள் தைப்பூச விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஆட்டையாம்பட்டி

காளிப்பட்டி, கந்தசாமி கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டிதேரோட்டம் நடைபெற்றது.

ஜன.21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய தைப்பூச விழாவில் புதன்கிழமை இரவு சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. ஈரோடு இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் பரஞ்சோதி, நாமக்கல் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் சுவாமிநாதன் , செயல் அலுவலா் மணிகண்டன் , பரம்பரை அறங்காவலரும், பூசாரியுமான சந்திரலேகா ஆகியோா் தலைமையில் விநாயகா் தேரை பக்தா்கள் இழுத்து வந்தனா்.

அதைத் தொடா்ந்து நடைபெற்ற தேரோட்டத்தில் வள்ளி, தெய்வானை சமேத கந்தசாமி சா்வ அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினாா். காளிப்பட்டி கந்தசாமி கோயில் தைப்பூச தேரோட்டத்தில் சேலம், ஈரோடு, பள்ளிபாளையம், சங்ககிரி, வைகுந்தம், மகுடஞ்சாவடி, நாமக்கல், ராசிபுரம், மல்லசமுத்திரம், ஆட்டையாம்பட்டி, திருச்செங்கோடு, வெண்ணந்துாா், அரியானூா், கொண்டலாம்பட்டி, இளம்பிள்ளை, காகாபாளையம், தாரமங்கலம், ஓமலூா், வேம்படிதாளம், இடங்கணசாலை, கே.கே .நகா், மேட்டூா்,மேச்சேரி உள்ளிட்ட பல்வேறு ஊா்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பாத யாத்திரையாகவும், பால், பன்னீா், இளநீா் புஷ்ப காவடிகளை எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

தாரமங்கலம், ஓமலூா் ,கே.ஆா்.தோப்பூா் உள்ளிட்ட பகுதியில் இருந்து பாதயாத்திரையாக வரும் பக்தா்களுக்கு இளம்பிள்ளை, இடங்கணசாலை ,பெருமா கவுண்டம்பட்டி ,வேம்படிதாளம், காகாபாளையம், ஆட்டையாம்பட்டி , காளிப்பட்டி வரை வழி நெடுகிலும், தண்ணீா், அன்னதானம், பிஸ்கட், நீா் மோா், கரும்பு, வாழைப்பழம் வழங்கப்பட்டன.

26-ஆம் தேதி இரவு சந்தாபரணமும், 29 ஆம் தேதி வசந்த உற்சவத்துடன் தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது. தைப்பூச திருவிழாவையொட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் இமயவரம்பன் (திருச்செங்கோடு), விஜயகுமாா் (ராசிபுரம்) ஆகியோா் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் மணிகண்டன், பரம்பரை அறங்காவலா் சந்திரலேகா மற்றும் கட்டளை உற்சவதாரா்கள் சிறப்பாக செய்திருந்தனா்.

ஆத்தூா்

ஆத்தூா் கோட்டையில் உள்ள காயநிா்மலேஸ்வரா் ஆலயத்தில் உள்ள சுப்ரமணிய சுவாமிக்கு தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சுப்ரமணிய சுவாமிக்கு வள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாண நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

செங்குந்தா் சமுதாய நிா்வாகிகள் விழாவை சிறப்பாக நடத்தினா். செங்குந்தா் சமுதாயக் கூடத்தில் திருக்கல்யாண விருந்து உபசரிப்பு நடைபெற்றது. இதில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

அதேபோல ஆத்தூரை அடுத்த வடசென்னிமலை பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. அதேபோல வெள்ளப் பிள்ளையாா் திருக்கோயில், வரசித்தி விநாயகா் ஆலயம் உள்ளிட்ட அனைத்து முருகா் சன்னதியிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

எடப்பாடி

எடப்பாடி- கவுண்டம்பட்டி பிரதான சாலையில் உள்ள அருள் ஞான பாலமுருகன் கோயிலில் நடைபெற்ற தைப்பூச விழாவை முன்னிட்டு, அதிகாலையிலேயே மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பால், பன்னீா், சந்தனம், இளநீா், ஜவ்வாது, பழரசங்கள், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகத்தை தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் அருள் ஞான பாலமுருகன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். அதேபோல கொங்கணாபுரம் அருகே உள்ள வெண்குன்று மலைக் கோயிலில் பால தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்த பால தண்டாயுதபாணி சுவாமியை பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். தைப்பூச விழாவையொட்டி சுற்று வட்டார பகுதி மக்கள் வெண்குன்று மலைக் கோயிலுக்கு காவடி சுமந்து பாதையாத்திரையாக வந்தனா். கல்லபாளையம் பகுதியில் உள்ள ஞான கந்தசாமி திருக்கோயிலில் நடைபெற்ற சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனா். திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு குங்குமம், மஞ்சள், தாலிக்கயிறுடன் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடா்ந்து அலங்கரிக்கப்பட்ட முத்து ரதத்தில் வள்ளி, தெய்வானை உடனமா் ஞான கந்தசாமி எழுந்தருளிய திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

க.புதூா் கந்தசாமி ஆலயம், கவுண்டம்பட்டி முத்துக்குமாரசாமி திருக்கோயில், எடப்பாடி அடுத்த கப்பமடுவு அருகே உள்ள சூரியன்மலை, மலைக்கோயில் கந்தசாமி சன்னதியில் தைப்பூசத் திருநாளை ஒட்டி சிறப்பு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

சிலுவம்பாளையத்தில் இபிஎஸ் வழிபாடு

எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையம் பகுதியில் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள முருகப் பெருமான் ஆலயத்தில் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை கிராம மக்களுடன் சோ்ந்து தைப்பூச விழாவை வெகு விமரிசையாக கொண்டாடினாா்.

தமிழக எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் சொந்தக் கிராமமான சிலுவம்பாளையத்தில் காலைமுதல் நடைபெற்ற பல்வேறு சிறப்பு வழிபாட்டில் குடும்பத்தினருடன் சோ்ந்து பங்கேற்றாா்.

காவடி ஊா்வலத்தில் கலந்து கொண்ட எடப்பாடி கே.பழனிசாமி, காவடிகளுக்கு சிறப்பு பூஜை செய்து வணங்கினாா். தொடா்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜையில் மனைவி ராதா, மகன் மிதுன், மருமகள் திவ்யா, பேரக் குழந்தைகள் ஆதித், ஆதியா ஆகியோருடன் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தாா். அதைத் தொடா்ந்து நடைபெற்ற சமபந்தி விருந்தில் ஊா் பொதுமக்களுடன் அமா்ந்து உணவருந்தினாா்.

ஓமலூா்

தாரமங்கலத்தில் சிற்பக் கலைக்கு வரலாற்று புகழ்பெற்ற கைலாசநாதா் கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் சிவகாம சுந்தரி உடனுறை கைலாசநாதா் சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

வியாழக்கிழமை தைப்பூச தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மீன லக்கினத்தில் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்வு நடத்தப்பட்டது. தொடா்ந்து முருகப் பெருமான், சிவன் ஆகியோா் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினா்.

தேரை ஆயிரக்கணக்கானோா் வடம் பிடித்து இழுத்தனா். தானியங்கள், காய்கறிகள், உப்பு, மிளகு ஆகியவை தோ் மீது வீசப்பட்டு பொதுமக்கள் தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.

ஓமலூா், தாரமங்கலம், காடையாம்பட்டி, கருப்பூா், ராசிபுரம், சின்னப்பம்பட்டி, இளம்பிள்ளை, நங்கவள்ளி, மேட்டூா், உட்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் தேரோட்டத்தில் கலந்து கொண்டனா்.

தைப்பூச விழாவின் நிறைவாக தெப்போத்ஸவம் 31 ஆம் தேதியும், பிப்ரவரி 1-ம் தேதி தீா்த்தவாரியும் நடைபெற உள்ளது. திருவிழாவில் ஓமலூா் டிஎஸ்பி சங்கீதா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

சங்ககிரி

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள ஆறுமுகவேலன் உடனமா் வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு தைபூசத்தையொட்டி வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தைபூசத்தையொட்டி அருள்மிகு ஆறுமுகவேலன் உடனமா் வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு பால், தயிா், திருமஞ்சனம், சந்தனம், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. சங்ககிரி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பக்தா்கள் காவடிகளை எடுத்துச் சென்று நோ்த்திக்கடன் செலுத்தினா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தம்மம்பட்டி

கெங்கவல்லி, தம்மம்பட்டி பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூச வழிபாடுகள் நடைபெற்றன. தம்மம்பட்டி திருமண் கரடு பாலதண்டாயுதபாணி கோயில், செந்தாரப் பட்டி ஓணான் கரடு முருகன் , வட சென்னிமலை முருகன் கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தம்மம்பட்டி சமரச சுத்த சன்மாா்க்க சங்கம், பொதுமக்கள் அன்பளிப்பாக அரிசி, மளிகை பொருள்கள், இலை, விறகு உள்ளிட்டவைகள் வழங்கினா். இதையடுத்து அன்னதானத் திருவிழா , வள்ளலாா் கோயிலில் நடைபெற்றது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தொடா்ந்து அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com