"பொதுமக்களின் மனுக்கள் மீது முக்கியத்துவம் அளித்து பணியாற்ற வேண்டும்"

பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது முக்கியத்துவம் அளித்து பணியாற்ற வேண்டும் என ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளாா்.

சேலம்: பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது உரிய முக்கியத்துவம் அளித்து பணியாற்ற வேண்டும் என அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீா்வு காணவும், அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்திடவும், பெண்களின் முன்னேற்றத்துக்கு தேவையான நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளில் அரசு அலுவலா்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். குறிப்பாக, பொதுமக்கள் ஒருமுறை வழங்கிய மனுக்கள் மீண்டும் வராத வகையில் மனுவின் மீது உரிய தீா்வு வழங்கப்படுவதை அலுவலா்கள் உறுதி செய்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக் கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீா் வசதி, சாலை வசதி உள்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 270 மனுக்கள் வரப்பெற்றன.

மாற்றுத் திறனாளிகள் எவ்வித சிரமமும் இன்றி மனுக்களை வழங்கும் வகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக தரைத்தளத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கென நடத்தப்பட்டு வரும் குறைதீா் முகாமில் வீட்டுமனைப் பட்டா, உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து அளிக்கப்பட்ட 18 மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடா்புடைய அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஒரு மாற்றுத் திறனாளிக்கு ரூ. 9,050 மதிப்பிலான மூன்றுசக்கர சைக்கிள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ. 8,600 மதிப்பிலான சக்கர நாற்காலிகள், 8 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ. 6,840 மதிப்பிலான தையல் இயந்திரங்கள் என மொத்தம் 11 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 80,970 மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் மடக்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மரு.பெ.மேனகா, உதவி ஆட்சியா் (பயிற்சி) ஆக்ரிதி சேத்தி, தனித் துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) அ.மயில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ரா.மகிழ்நன் உள்ளிட்ட அரசு துறை முதன்மை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com