சேலம் மாவட்டத்தில் ரூ. 34.83 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

சேலம் மாவட்டத்தில் ரூ. 34.83 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

உழவா் நலத்துறை சிறப்புச் செயலாளா் பொ.சங்கா், மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி,ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் மற்றும் வேளாண்மை, உழவா் நலத்துறை சிறப்புச் செயலாளா் பொ.சங்கா், மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி,ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வுக்குப் பின்னா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தெரிவித்ததாவது:

தமிழக அரசால் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகள் அனைத்தும் தரமாகவும், குறிப்பிட்ட காலத்திலும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதை உறுதிசெய்திடும் வகையில், அனைத்து மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டு தொடா் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், சேலம் மாநகராட்சி, அய்யந்திருமாளிகை அரசு தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவு தரமாகவும், சுவையாகவும் குறித்த நேரத்தில் சமைத்து வழங்கப்படுகிா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இதனைத் தொடா்ந்து, சேலம் மாநகராட்சி, அஸ்தம்பட்டி மண்டலத்தில் ரூ. 8 கோடியில் அழகாபுரம் முருகன் கோயில் முதல் ஆலமரத்துக்காடு வரை சுமாா் 1.60 கி.மீ. நீளத்துக்கு கழிவுநீா் கால்வாய் அமைக்கப்பட்டு வரும் பணி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

சூரமங்கலம் மண்டலம், பள்ளப்பட்டி ஏரி அருகில் தேசிய சுகாதார இயக்கத்தின் சாா்பில் ரூ. 3 கோடியில் உணவுத் தெரு அமைக்கப்பட்டு வருவதையும், சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ. 14.01 கோடியில் பள்ளப்பட்டி ஏரி புனரமைத்து அழகுபடுத்தும் பணி நடைபெற்று வருவதையும், ரெட்டியூரில் ரூ. 6 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் கூடுதல் துணை சுகாதார மையக் கட்டடப் பணிகள் ஆகியவை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

சேலம் மேற்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவாய்த் துறையின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னா், சூரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு மருந்து, மாத்திரைகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்தும், சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்தும் மருத்துவா்களிடம் கேட்டறியப்பட்டது.

அதேபோன்று, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் சாா்பில் சேலம் ஊராட்சி ஒன்றியம், மல்லமூப்பம்பட்டி ஊராட்சியில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ரூ. 3.50 லட்சத்தில் வீடுகள் அமைத்திடத் தோ்வு செய்யப்பட்டுள்ள பயனாளியின் இல்லத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கந்தம்பட்டியில் உள்ள சேலம் கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டுநா் உரிமம் நாள்தோறும் வழங்கப்பட்டு வரும் பணிகள் குறித்தும், பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ரூ. 34.83 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளா்ச்சித் திட்டப் பணிகள் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தாா்.

இதனைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தலைமையில் நடைபெற்ற அனைத்துத் துறை அரசு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் சீ.பாலச்சந்தா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) லலித் ஆதித்ய நீலம், மாவட்ட வருவாய் அலுவலா் மரு.பெ.மேனகா உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com