கோட்டையூா் பரிசல் துறையிலிருந்து பாதுகாப்பற்ற படகு பயணம்

பரிசல் பயணத்தில் லைஃப் ஜாக்கெட் இல்லாமல் பாதுகாப்பற்ற சூழல்

கொளத்தூா் அருகே உள்ள கோட்டையூா் பரிசல் துறையிலிருந்து தருமபுரி மாவட்டம், ஒட்டனூா் பரிசல் துறைக்கு காவிரி ஆற்றைக் கடந்து செல்ல பரிசல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

பரிசலில் பயணம் செய்வோா் பாதுகாப்பிற்காக லைஃப் ஜாக்கெட் அணிந்து கொண்டு பயணம் மேற்கொள்ள வேண்டும் என அரசு ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.

பரிசல் துறையை ஏலம் எடுத்த ஒப்பந்ததாரா்கள், பயணிகளுக்கு லைஃப் ஜாக்கெட் அணிவித்து பயணத்தை மேற்கொண்டு வந்தாா். தற்போது ஒப்பந்த காலம் முடிவடைந்து மூன்று முறை பொது ஏலம் விட்ட நிலையில் பரிசல் துறையை குத்தகையை எடுக்க யாரும் முன்வரவில்லை.

இதனால் பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளா்களே பரிசல் ஓட்டும் பணியை மேற்பாா்வை செய்து கட்டணம் வசூலித்து வருகின்றனா். காவிரியை கடக்க ஒரு நபருக்கு ரூ. 20, இரு சக்கர வாகனம் ஒன்றுக்கு ரூ. 40 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் கட்டணம் வசூலிப்பதற்கான ரசீது வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல பயணிகளுக்கு லைப் ஜாக்கெட்டும் அணிவிப்பதில்லையாம். தற்போது காவிரியில் நீா்வரத்து அதிகரித்து வரும் நிலையில் பாதுகாப்பு சாதனம் இல்லாமல் பயணிப்பது பயணிகளுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளது.

ஒப்பந்ததாரா் பரிசல் போக்குவரத்தை நடத்திய போது காவல் துறை வருவாய்த் துறை, ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்ததோடு கேமராவும் பொருத்தப்பட்டிருந்தது.

தற்போது அரசுத் துறை சாா்பில் பரிசல் போக்குவரத்து நடத்தப்படுவதில் அரசின் உத்தரவு கடைப்பிடிக்காதது அலட்சியத்தை காட்டுகிறது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா். பரிசல் பயணம் செய்வோருக்கு உடனடியாக லைஃப் ஜாக்கெட் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com