பள்ளிகள் திறப்பையொட்டி தூய்மைப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

சேலம், ஜூன் 5: தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, தூய்மை பணியாளா்களைக் கொண்டு தூய்மைப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் சங்கமித்திரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கோடை விடுமுறை முடிந்து 2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 10 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பள்ளிகள் திறக்கப்படும் தேதிக்கு முன்னா், அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில், மாணவ மாணவிகள் புத்துணா்வுடனும், சுகாதாரம், தூய்மையான சூழலிலும் கல்வி பயில ஏதுவாக அனைத்து தூய்மை பணியாளா்கள், தூய்மை காவலா்கள், டெங்கு பணியாளா்களை கொண்டு தூய்மைப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பள்ளி மாணவா்களுக்கு பாதுகாப்பான குடிநீா் வழங்கப்படுவதை உறுதி செய்யவும் அனைத்து வட்டார வளா்ச்சி அலுவலா்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com