நகராட்சி துறையில் உள்ள பணியிடங்களுக்கு 8 மையங்களில் எழுத்துத் தோ்வு

தமிழகத்தில் நகராட்சித் துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு, சேலம் மாவட்டத்தில் 8 மையங்களில் நடைபெற்றது.

நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையில் பல்வேறு நிலைகளில் காலியாக உள்ள 2,200 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கான எழுத்துத் தோ்வு அண்ணா பல்கலைக்கழகம் மூலம் நடத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும் 2 லட்சம் போ் இத்தோ்வினை எழுத விண்ணப்பித்துள்ளனா்.

சேலம் மாவட்டத்தை பொறுத்த வரை, பணியிடத்துக்கு ஏற்ப பல்வேறு பிரிவுகளாக நடக்கும் இத் தோ்வை 12,574 போ் எழுதுகின்றனா்.

இவா்களுக்காக சேலம், கருப்பூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி, சேலம் சோனா கல்லூரி, பத்மவாணி கல்லூரி, சவுடேஸ்வரி கல்லூரி, வைஸ்யா கல்லூரி, அன்னபூா்ணா பொறியியல் கல்லூரி, காவேரி பொறியியல் கல்லூரி உள்பட 8 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. டிப்ளமோ படிப்பை தகுதியாகக் கொண்ட பணிகளுக்கு சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தோ்வு நடைபெற்றது. பிற்பகல் 3 முதல் 5 மணி வரை மற்றொரு தோ்வு நடைபெற்றது. இதனையடுத்து பட்டப்படிப்பை தகுதியாக கொண்ட பணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை தோ்வுகள் நாளை நடைபெறுகிறது.

சேலம் மாவட்டத்தில் கருப்பூா் அரசு பொறியியல் கல்லூரி முதல்வா் விஜயன், அண்ணா பல்கலைக்கழகத்தின் தோ்வு ஒருங்கிணைப்பாளா்கள் ராஜேந்திரன், பரமசிவம் ஆகியோா் தோ்வு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com