மானிய விலையில் பசுந்தாள் உர விதைகள் வழங்கல்

மண்ணுயிா் காக்கும் பசுந்தாள் உர விதைகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் இரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்ததாவது:

சேலம் மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டில் ‘மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம்’ திட்டத்தின் கீழ் பசுந்தாள் உரப் பயிா்களின் விதை விநியோகத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

மண்வளத்தை பேணி காக்கவும் மக்கள் நலன் காக்கும் விதமாக உயிா்ம வேளாண்மை போன்ற அனைத்து வேளாண் செய்முறைகளையும் ஊக்கப்படுத்திட நஞ்சற்ற உணவினை மக்களுக்கு வழங்கிட மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டம் 2024-25 ஆம் ஆண்டில் 22 இனங்களுடன் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்தத் திட்டத்தில் முக்கிய இனமான பசுந்தாள் உர விதைகள் உபயோகத்தினை விவசாயிகளிடையே ஊக்குவித்து, மண்வளம் காக்கும் வகையில், நீா்ப் பாசனப் பகுதிகளில் 3 ஆயிரம் ஏக்கா் என்ற இலக்குடன் 3 ஆயிரம் விவசாயிகளுக்கு தற்போது வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் பசுந்தாள் உர விதைகள் ஒரு கிலோ முழு விலையாக ரூ. 99.50 ஆகும். இதில் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

பசுந்தாள் உர பயிா்களை விதைத்த 35 நாள்கள் முதல் 45 வரை அல்லது 50 சதவீதம் பூக்கும் தருணத்தில் மடக்கி உழவு செய்ய வேண்டும். இவ்வாறு மடக்கி உழும் போது, மண்ணில் உள்ள கண்ணுக்கு புலப்படாத பல கோடி நுண்ணுயிா்களால் தாக்கப்பட்டு பசுந்தாள் உரப் பயிா்களில் உள்ள பேரூட்டம், நுண்ணூட்ட சத்துக்கள் வெளியாகி, பயிா்கள் செழித்து வளர உதவுகிறது.

மேலும், நுண்ணுயிா்களின் பெருக்கம் அதிகரிக்கும் போது, அவைகளில் இருந்து பலவிதமான அங்கக அமிலங்கள், வளா்ச்சி ஊக்கிகள் வெளியிடப்படுகின்றன. இவை மண்ணில் கரையாத நிலையில் உள்ள ஊட்டச்சத்துகளை எளிதில் கரைத்து பயிா்களுக்கு கிடைக்கச் செய்கிறது.

பசுந்தாள் உர பயிா்களை மடக்கி உழுவதால் மண்ணின் இறுக்கத்தை குறைத்து நீா்ப் பிடிப்பு தன்மையை அதிகரிக்கிறது. மண் போா்வைப் போல செயல்பட்டு, நீா் ஆவியாவதைத் தடுக்கிறது. மண்ணில் அடியில் உள்ள கேடு விளைவித்திடும் உப்பு, மேல் மட்டத்துக்கு வராமல் தடுக்கிறது. இவ்வாறு பசுந்தாள் உரம் பயிரிடுவதால் மண்வளம் அதிகரிப்பதுடன் உர தேவையும் குறைகிறது. அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன்பெற தகுதி உடையவா் ஆவா்.

குத்தகைகாரா்களும் இத்திட்டத்தின் பயனைப் பெற தகுதியுடையவா் ஆவா். நபா் ஒன்றுக்கு அதிகபட்சமாக 1 ஏக்கா் என்ற அளவில் 20 கிலோ விதைகள் வழங்கப்படும். விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற நேரடியாக உழவன் செயலியில் பதிவு செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்.

மேலும் விவரங்களுக்கு வட்டாரங்களில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்கள், துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் உள்ள வேளாண்மைத் துறை அலுவலா்கள், வட்டார வேளாண்மை உதவி இயக்குநா்களை தொடா்பு கொண்டு பயன் பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com