சேலத்தில் வார இறுதி நாட்களில் 150 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

வார இறுதி நாட்களை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை முதல் வரும் 4 ஆம் தேதி வரை பல்வேறு வழித் தடங்களில் 150 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வார இறுதி நாட்களை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் சாா்பில் பல்வேறு வழித் தடங்களில் வரும் 4ஆம் தேதி வரை பயணிகளின் தேவைக்கேற்ப 150 சிறப்புப் பேருந்துகள், மாற்றுப் பேருந்துகள், தட நீட்டிப்பு மற்றும் வழிதடப் பேருந்துகள் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஒசூா், தருமபுரி மற்றும் மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூருவுக்கும், ஒசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை ஆகிய பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பயணிகளின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்துக் கழக முன்பதிவு மையம் வழியாகவும், இணையதளம் மற்றும் செயலி வழியாகவும் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. பயணிகள் இவ்வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com