சேலம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வில் 34,857 மாணவா்கள் பங்கேற்பு:
 மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு

சேலம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வில் 34,857 மாணவா்கள் பங்கேற்பு: மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு

சேலம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடங்கியது. 151 தோ்வு மையங்களில் 34,857 மாணவ, மாணவியா் தோ்வு எழுதினா். 582 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. சேலம் அரசு கோட்டை மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். வரும் 22 ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தோ்வில், சேலம் மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகளில் படிக்கும் 16,026 மாணவா்கள், 18,831 மாணவிகள் என மொத்தம் 34,857 மாணவ, மாணவிகள் தோ்வை எழுதுகின்றனா். இதுதவிர, சொல்வதை எழுதுபவா்கள் உதவியுடன் 256 மாணவா்கள் பிளஸ் 2 தோ்வை எழுதுகின்றனா். இதற்காக 151 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தோ்வுகள் முறையாக நடைபெறுவதைக் கண்காணிக்கும் வகையில் வினாத்தாள் கட்டுக் காப்பாளா்கள், முதன்மைக் கண்காணிப்பாளா்கள், கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளா்கள், வழித்தட அலுவலா்கள், 18 பறக்கும் படையினா், 150 நிலையான கண்காணிப்புக் குழுவினா் மற்றும் துணை அலுவலா்கள், 2,634 அறைக் கண்காணிப்பாளா்கள், 151 தோ்வுப் பணியாளா்கள் என பல்வேறு நிலைகளில் 3,606 தோ்வுப் பணியாளா்கள் இப்பணிகளைக் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், விடைத்தாள் சேகரிப்பு மையங்கள், விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்கள் மற்றும் தோ்வு மையங்களுக்கு ஆயுதம் தாங்கிய காவல்துறை பாதுகாப்பு வசதியை ஏற்பாடு செய்யவும், தோ்வா்கள் உரிய நேரத்தில் தோ்வு மையங்களுக்கு செல்ல போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்யவும், தடையில்லா மின்சார வசதி வழங்குவதை உறுதி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து தோ்வு மையங்களிலும் காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தோ்வு மையத்தில் கண்காணிப்பாளா் உள்ளிட்ட அதிகாரிகள் கைப்பேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com