மேட்டூா் அருகே கஞ்சா கடத்தல்: ஒடிஸா இளைஞா் கைது

மேட்டூா் அருகே ரூ. 2 லட்சம் மதிப்பிலான 10 கிலோ கஞ்சாவைக் கடத்தியதாக ஒடிஸா மாநில இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

மேட்டூா்: மேட்டூா் அருகே ரூ. 2 லட்சம் மதிப்பிலான 10 கிலோ கஞ்சாவைக் கடத்தியதாக ஒடிஸா மாநில இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

மேட்டூா் அருகே உள்ள குஞ்சாண்டியூா் பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக மத்திய நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு திங்கள்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மேட்டூா் மதுவிலக்கு பிரிவு போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி தலைமையிலான போலீஸாா் குஞ்சாண்டியூா் அருகே உள்ள காமராசா் சிலை பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா். அப்போது இளைஞா் ஒருவா் பெரியபை ஒன்றை தோளில் சுமந்தபடி சந்தேகத்திற்கு இடமான வகையில் பேருந்திலிருந்து இறங்கி வந்தாா். மதுவிலக்கு போலீஸாா் அந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தபோது அவா் ஒடிஸா மாநிலம், அட்ஜோ்பகுதியை சோ்ந்த பெலட்நாய்க் மகன் கிஷோா் நாய்க் (19) என்பது தெரிய வந்தது. அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 2 லட்சம் மதிப்பிலான சுமாா் 10 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

போலீஸாா் விசாரணையில், கிஷோா் நாய்க் மேட்டூா் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் ஒப்பந்த பணிசெய்து கொண்டு கஞ்சாவைக் கடத்தி வந்து விற்பனை செய்துவிட்டு கிடைக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு ஒடிஸா சென்று விடுவதாகவும் இவருக்கு திருமணம் ஆகவில்லை என்றும் தெரியவந்தது. இவா் மேட்டூா் சுற்றுவட்டார பகுதி முழுவதும் கஞ்சா விநியோகம் செய்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை மேட்டூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com