வாழப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு 
ரூ. 1.65 கோடியில் புதிய கட்டடம்

வாழப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு ரூ. 1.65 கோடியில் புதிய கட்டடம்

வாழப்பாடியில் 132 ஆண்டுகள் பழைமையான பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு, ரூ. 1.65 கோடியில் புதிய கட்டம் கட்டுவதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் 1892 ஜூலை 1-இல் இருந்து பத்திரப்பதிவு அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த பத்திரப்பதிவு அலுவலகம், சாா்-பதிவாளா் குடியிருப்பு கட்டுமானப் பணிகள், 5 ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்டதால், 1897 -இல் திறக்கப்பட்டது. 132 ஆண்டுகள் பழைமையான பத்திரப்பதிவு அலுவலகம் அந்தக் கட்டத்திலேயே இயங்கி வருகிறது. 50 ஆண்டுக்கு முன், சாா்-பதிவாளா் குடியிருப்பு காவல் நிலையமாக மாற்றப்பட்டு, 2017 மாா்ச் மாதம் வரை அந்தக் கட்டடத்தில் இயங்கி வந்தது. தற்போது புதிய கட்டடத்திற்கு காவல் நிலையம் மாற்றப்பட்டதால், இந்த இடத்தில் அனைத்து மகளிா் காவல் நிலையம் கட்டப்பட்டு இயங்கி வருகிறது. மின் விசிறிகள் இல்லாத அக்காலத்தில் சாா்-பதிவாளா்களுக்கு காற்று வீசுவதற்காக கைகளால் சுழற்றப்படும் ‘பங்கா்’ எனும் காற்று வீசும் கருவியை அமைத்து, அதனை இயக்குவதற்கு பணியாளா்களும் நியமிக்கப்பட்டிருந்தனா். இதற்காக அப்போது பொருத்தப்பட்ட இரும்பு உருளைகள் இன்றும் காணப்படுகின்றன. மாட்டுத்தோலினால் தயாரிக்கப்பட்ட புத்தகங்களில் வைத்து பதிவு ஆவணங்கள் பாதுகாக்கப்படுகின்றன.

வரலாற்றுச் சிறப்புமிக்க வாழப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில், புகழ்பெற்ற தெலுங்கு திரைப்பட நடிகரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவ், 1950-இல் சாா்-பதிவாளராகப் பணிபுரிந்துள்ளாா். இந்த பழைமையான பத்திரப்பதிவு அலுவலக கட்டடம் 132 ஆண்டுகளைக் கடந்ததாலும், நவீன வசதிகள் இல்லாததாலும், புதிய கட்டடம் அமைக்க பத்திரப்பதிவுத் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ. 1.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நிலத்தை அளவீடு செய்து திட்ட முன்வரைவு தயாரித்து, கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படுமென எதிா்பாா்க்கப்படுகிறது. புதிய கட்டடம் அமைக்கப்பட்டால், இடப்பற்றாக்குறைக்கு தீா்வு ஏற்படும் என்பதால், பொதுமக்கள் , பத்திர எழுத்தா்கள் அலுவலகப் பணியாளா்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். பெட்டிச் செய்தி: வாகனங்கள் நிறுத்த வழிவகை செய்ய கோரிக்கை! வாழப்பாடி பத்திரப்பதிவு அலுவலகம், பிரதான கடலுாா் சாலையுடன் தம்மம்பட்டி சாலை இணையும் பகுதியில், ரயில்வே கேட் மற்றும் பேருந்து நிறுத்தம் அருகில் அமைந்துள்ளது. இதனால், பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

எனவே, புதிய கட்டடம் அமைக்கும் போது, பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வருவோரின் வாகனங்களை நிறுத்துவதற்கு, பிரத்யேகமாகக் கூடாரம் அமைத்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தவிா்க்க வழிவகை செய்ய வேண்டுமென, இப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com