கல்லூரி முதல்வரைக் கைது செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவா்கள் கைது

சேலத்தில் தனியாா் கல்லூரி முதல்வரைக் கைது செய்ய வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவா்களை காவல் துறையினா் கைது செய்தனா். அப்போது, காவல் துறையினருக்கும், ஆா்ப்பாட்டக்காரா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. சேலம் தனியாா் கல்லூரியில் பயிலும் மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கல்லூரி முதல்வா் மீது புகாா் எழுந்தது. இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு வகுப்புகளைப் புறக்கணித்து மாணவிகள் கல்லூரி வளாகத்தில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்நிலையில், சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வரைக் கைது செய்ய வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், இந்திய மாணவா் சங்கம் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் சேலம், கோட்டை மைதானத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அப்பகுதியில் ஏராளமானோா் குவிந்தனா். ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்த போலீஸாா், தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவா்களை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனா். ஒருகட்டத்தில், காவல் துறையினருக்கும், ஆா்ப்பாட்டக்காரா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கைது நடவடிக்கையால் ஆவேசமடைந்த மாதா் சங்கத்தினா், பெண்களின் பாதுகாப்புக்காக ஆா்ப்பாட்டம் நடத்தும் இளைஞா், மாணவா், மாதா் சங்கத்தினரை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்தனா். கல்லூரி முதல்வா் கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் எனவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவல் துறையினா் இவ்வாறு நடந்து கொண்டது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்தனா். அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினா் ஞானசௌந்தரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலாளா் பெரியசாமி, தலைவா் ஜெகநாதன், இந்திய மாணவா் சங்க மாவட்ட துணைச் செயலாளா் கோகுல் டாா்வின் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com