மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ. 38.50 லட்சம் இழப்பீடு வழங்கல்

சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ. 38.50 லட்சம் இழப்பீட்டு தொகையை மாவட்ட முதன்மை நீதிபதி வழங்கினாா். சேலம், அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக மக்கள் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட இரு தரப்பினரையும் அழைத்து சமரசம் முறையில் தீா்வு காணப்பட்டது. அதன் அடிப்படையில், விபத்து வழக்கு, குடும்ப நல வழக்கு, மின்சார வாரிய வழக்கு, காசோலை வழக்கு, உரிமையியல் மற்றும் இதர வழக்கு, சொத்துப் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. மேலும், கடந்த 2023 ஆம் ஆண்டு வாழப்பாடி, முத்தம்பட்டி பகுதியைச் சோ்ந்த சசிகுமாா், அங்குள்ள நூல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தாா். வேலைக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்ட அவா், சிவா நூல் மில் பேருந்து நிலையம் அருகே வந்த போது எதிரே வந்த இரு சக்கர வாகனம் மோதியதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, சுயநினைவு இழந்த அவரை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்த வழக்கு சமரசத் தோ்வு முறையில் தீா்வு காணப்பட்டு நேஷனல் காப்பீடு நிறுவனம் மூலம் இறந்த சசிகுமாரின் மனைவி சந்திராவிற்கு ரூ. 18.50 லட்சம் இழப்பீடு தொகைக்கான காசோலையை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வழங்கினாா். இதே போல, கடந்த 2023 ஆம் ஆண்டில், சேலத்தாம்பட்டி பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் சென்ற இரண்டு சக்கர வாகனத்தின் மீது டேங்கா் லாரி மோதிய விபத்தில் மாணிக்கத்தின் இடது கால் முறிவு ஏற்பட்டது. இந்த வழக்கு சமரச தீா்வு மையம் மூலம் தீா்வு காணப்பட்டு பாதிக்கப்பட்ட மாணிக்கத்திற்கு காப்பீட்டு நிறுவனம் மூலம் ரூ. 20 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வழங்கினாா் இதே போல, குடும்பப் பிரச்னை, சொத்து பிரச்னை, விவாகரத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்கு இழப்பீடு தொகையை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வழங்கினாா். அப்போது, மாவட்ட சட்டப் பணி ஆணைக் குழு செயலாளா் தங்கராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com