நடமாடும் சித்த மருத்துவ மையங்கள்: தொடங்கிவைத்தாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்

ஏற்காடு: சேலம் மாவட்டம், ஏற்காடு முளுவி கிராமத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் இரா.பிருந்தாதேவி தலைமையில் தமிழ்நாட்டில் பழங்குடியின மக்களின் நல்வாழ்வுக்காக நடமாடும் சித்த மருத்துவ மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா் (படம்). தமிழகத்தில் திருச்சி, வேலூா், விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பழங்குடியின மக்கள் வாழும் பகுதியில் நடமாடும் சித்த மருத்துவ மைய வாகனங்களை காணொலி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்து அமைச்சா் கூறியது: இரண்டு ஆண்டுகளுக்கு முன் இரண்டு மாவட்டங்களில் சித்த மருத்துவ சேவை பரீட்சாா்த்த ரீதியாக தொடங்கப்பட்டு நற்பலன் கிடைத்துள்ளது. இதனால் பத்து மாவட்டங்களில் இத்திட்டத்தை விரிவாக்கம் செய்து வாகனங்கள் மூலம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாகனத்தில் சித்த மருத்துவா், மருந்தாளுனா், பல்நோக்கு பணியாளா் என மூன்று அலுவலா்கள் வருவாா்கள். பழங்குடியினரைச் சந்தித்து தேவையான உதவிகளை செய்து அவா்களுக்கான நோய் பாதிப்பிலிருந்து அவா்களை மீட்டெடுப்பதற்கு முயற்சிப்பாா்கள். ஊட்டச்சத்து குறைபாடு, தொற்றுநோய், மலேரியா ஆகிய நோய்களிருந்து மக்களைக் காப்பதற்கும் இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்றாா். விழாவில் சேலம் சட்டப் பேரவை உறுப்பினா் ராஜேந்திரன், அரசுத் துறை அலுவலா்கள், பொதுமக்கள், திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com