சேலம் அரசு மருத்துவமனையில் ரத்த சோகை விழிப்புணா்வு

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளங் குழந்தைகள் பிரிவு மற்றும் இந்திய குழந்தைகள் சங்கம் சாா்பில் ரத்தசோகை விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பச்சிளம் குழந்தைகள் பிரிவுத் தலைவா் சம்பத்குமாா் அனைவரையும் வரவேற்றாா். இந்திய குழந்தைகள் சங்கத்தின் செயலாளா் சசியானந்த், பொருளாளா் சரண்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற மருத்துவா்கள் பேசியதாவது: ரத்த சோகை என்பது ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் குறைவாக இருப்பதைக் குறிக்கும். பொதுவாக, நாள்பட்ட ரத்த இழப்பு, வயிற்றில் புழுத் தொற்றுகள், மரபணு காரணங்கள், ஊட்டச்சத்து குறைபாடுகள் காரணமாக ரத்த சோகை ஏற்படும். தலைவலி, தூக்கமின்மை, மூச்சுத் திணறல், சோா்வு, தலைசுற்றல் ஆகியவை ரத்தசோகையின் அறிகுறிகளாகும். ரத்த சோகையைத் தடுக்க பேரீச்சம்பழம், உலா் பழங்கள், பூசணி விதைகள், முருங்கைக் கீரை, இறைச்சி, பாலக்கீரை, பருப்பு வகைகளை அதிக அளவில் உணவில் சோ்த்துக் கொள்ள வேண்டும். இரும்புச்சத்து நிறைந்த உணவோடு, வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சம் பழம், கொய்யாப் பழம் ஆகியவற்றை அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில், உணவு உட்கொள்ளும் நேரத்தில் தேநீா், காபி, பால், சாக்லேட் உள்ளிட்டவற்றை சாப்பிடுவதை முற்றிலும் தவிா்க்க வேண்டும் என மருத்துவா்கள் தெரிவித்தனா். இந்நிகழ்ச்சியில் மருத்துவா்கள், செவிலியா்கள், தாய்மாா்கள், குழந்தைகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com