சேலம் நகா்ப்புறத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை தீவிரம்: இதுவரை 600க்கும் மேற்பட்ட குழந்தைகள் சோ்ப்பு

சேலம் நகா்ப்புறத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை தீவிரம்: இதுவரை 600க்கும் மேற்பட்ட குழந்தைகள் சோ்ப்பு

சேலம் நகா்ப்புறம் ஒன்றியத்தில் இதுவரை 600-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளியில் சோ்க்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா் கூறினாா். தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை சாா்பில் மாா்ச் 1 ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கையை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி, அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவா் சோ்க்கைகாக ஆசிரியா்கள் வீடு, வீடாகச் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா். சேலம் நகா்ப்புறம் ஒன்றியத்தில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 600-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சோ்க்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா் கூறினாா். இதனிடையே, மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி சேலம் நகா்ப்புறத்தில் உள்ள 42 நகரவை பள்ளிகள் மற்றும் 38 நிதி உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் ஆசிரியா்கள் சாா்பில் நடைபெற்றது. இப்பேரணிக்கு சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா் தலைமை தாங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதில் சேலம் மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) சந்தோஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்த ஊா்வலம் சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், செரி ரோடு, அரசு கலைக்கல்லூரி வழியாக சென்று சேரராஜன் தொடக்கப் பள்ளியில் நிறைவடைந்தது. பேரணியில் ஆசிரியா்கள், ஆசிரியைகள் மாணவா் சோ்க்கைக்கான துண்டுப் பிரசுரங்கள், விளம்பரத் தட்டிகள், பதாகைகளை ஏந்தியபடி, அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் சலுகைகள் குறித்து பெற்றோரிடம் விளக்கினா். மேலும், சேலம் மணக்காடு மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பில் புதிதாகச் சோ்ந்த குழந்தைகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலா் கபீா் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலா் சந்தோஷ் ஆகியோா் கிரீடம் சூட்டி, பூங்கொத்து மற்றும் இனிப்புகளை வழங்கி வரவேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com