சேலத்தில் வார இறுதி நாட்களில் 150 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

வார இறுதி நாட்களை முன்னிட்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் சாா்பில் வரும் 18ஆம் தேதி வரை பல்வேறு வழித் தடங்களில் 150 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சேலம் மண்டலத்தில் 1,047 பேருந்துகளும், தருமபுரி மண்டலத்தில் 853 பேருந்துகளும் சோ்த்து மொத்தமாக 1,900 பேருந்துகள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன. வார இறுதி நாட்களை முன்னிட்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் சாா்பில் பல்வேறு வழித்தடங்களில் வரும் 18 ஆம் தேதி வரை பயணிகளின் தேவைக்கேற்ப 150 சிறப்புப் பேருந்துகள், மாற்றுப் பேருந்துகள், தட நீட்டிப்பு மற்றும் வழிதடப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஒசூா், தருமபுரி மற்றும் மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை மற்றும் பெங்களூருவுக்கும், ஒசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஒசூா் உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் பயணிகளின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்துக் கழக முன்பதிவு மையம் வழியாகவும், இணையதளம் மற்றும் செயலி வழியாகவும் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. எனவே, பயணிகள் அனைவரும் பயண நெரிசலைத் தவிா்தது, இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com