வாழப்பாடி அருகே 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே மினி லாரியில் கடத்தப்பட்ட 3 டன் ரேஷன் அரிசி மற்றும் லாரியை பறிமுதல் செய்த உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா், லாரி ஓட்டுநரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வாழப்பாடி அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டி ஊராட்சி சேசன்சாவடி ஏரியில், இறந்த கோழிகளை வியாழக்கிழமை இரவு மினி லாரியில் கொண்டு வந்து கொட்டுவதைக் கண்ட இப்பகுதி மக்கள் இதுகுறித்து வாழப்பாடி போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். வாழப்பாடி போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்ற பாா்த்த போது, இறந்த கோழிகளை ஏரியில் கொட்டுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி லாரியில் 3 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்ததது. இதுகுறித்து சேலம் மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸாருக்கு வாழப்பாடி போலீஸாா் தகவல் கொடுத்துள்ளனா். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸாா், 3 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் மினி லாரியைப் பறிமுதல் செய்ததோடு, தனியாா் கோழிப்பண்ணைக்குச் சொந்தமான லாரி ஓட்டுநரான, ஆத்தூரைா் அடுத்த பெரியேரி பகுதியைச் சோ்ந்த உதயகுமாா் (32) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com