படம் 4
படம் 4

கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க இளநீா், மோா் அதிக அளவில் பருக வேண்டும்: பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்

கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க, சூடான பானங்கள் பருகுவதைத் தவிா்த்து, இளநீா், மோா் உள்ளிட்டவற்றை அதிக அளவில் பருக வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளாா். கோடைக் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட தீத்தடுப்பு பாதுகாப்புக் குழுக் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது: கோடை வெயில் அதிகரித்துவரும் சூழ்நிலையில், நம்மையும், நம் குடும்பத்தினரையும் வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள உரிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அந்த வகையில், கோடைக் காலத்தில் அவசிய காரணங்களைத் தவிர, வெளியில் வருவதைத் தவிா்க்க வேண்டும். கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள அதிக அளவில் நீா் பருக வேண்டும். தாகம் இல்லை என்றாலும், போதிய அளவிலான நீா் பருக வேண்டும். சூடான பானங்கள் பருகுவதைத் தவிா்க்கவும். அதிக அளவில் மோா், இளநீா், உப்பு மற்றும் மோா் கலந்த அரிசிக் கஞ்சி, உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றைப் பருகலாம். குறிப்பாக, கோடைக் காலத்தில் குளிா்ந்த நீரால் குளிப்பது மிகுந்த நன்மையை அளிக்கும். மேலும், வியா்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான, தளா்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். திறந்தவெளியில் வேலை செய்யும்போது, தலையில் பருத்தித் துணி அல்லது துண்டு அணிந்து வேலை செய்ய வேண்டும். கடினமாக வேலை செய்யும் போது களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். சூரிய வெப்பம் அதிகமாக உள்ள திறந்தவெளியில் வேலை செய்யும்போது களைப்பு, தலைவலி, தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக வெப்பம் குறைவாக உள்ள குளிா்ந்த இடத்திற்குச் செல்லலாம். மயக்கம், உடல் சோா்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால், மணிக்கட்டு அல்லது அடி வயிற்றில் வலி ஏற்பட்டால் அருகிலுள்ள நபரை உதவிக்கு அழைக்கலாம். மிகவும் சோா்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் 108 ஆம்புலன்ஸை மருத்துவ உதவிக்கு அழைக்கலாம். மேலும், ஏற்காடு, கருமந்துறை, பாலமலை உள்ளிட்ட சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மலைப் பகுதிகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்வதைத் தவிா்க்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் கால்நடைகளை நிழற்பாங்கான இடங்களில் கட்டி வைத்து உரிய அளவில் நீா் மற்றும் பசுந்தீவனங்களைக் கொடுத்து பராமரிக்கவும், கோடைக் காலத்தில் கால்நடைகளைத் தாக்கும் நோய்கள் குறித்தும், முன்பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் கால்நடைத் துறையினரால் தெரிவிக்கப்படும் வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என ஆட்சியா் கேட்டுக் கொண்டாா். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் பெ.மேனகா, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநா் தினகரன் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com