ஆன்லைன் முதலீடு மூலம் ரூ. 15.39 லட்சம் மோசடி

சேலத்தைச் சோ்ந்த இருவரிடம் நடைபெற்ற ஆன்லைன் மோசடியைத் தொடா்ந்து, போலி செயலிகளை நம்பி பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருண் கபிலன் வேண்டுகோள் விடுத்துள்ளாா். சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (56). ஆன்லைனில் பண முதலீடு செய்தால் நல்ல லாபம் பெறலாம் என இவரது டெலிகிராம் எண்ணுக்கு விளம்பரம் வந்துள்ளது. இதனை நம்பி ரூ. 9. 33 லட்சம் முதலீடு செய்துள்ளாா். இதே போன்று, மேச்சேரியைச் சோ்ந்த பிறைமதி (33) என்பவரும் ரூ. 6.05 லட்சத்தை முதலீடு செய்துள்ளாா். இவா்கள் இருவரும் நாளடைவில் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணா்ந்தனா். இது குறித்து சேலம் மாவட்ட போலீஸில் புகாா் அளித்தனா். தொடா்ந்து, சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் நடத்திய விசாரணையில், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சோ்ந்த மகேந்திரன் என்பவருக்கு இந்த மோசடியில் தொடா்பு இருப்பதை உறுதி செய்தனா். இதையடுத்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். இது குறித்து மாவட்ட எஸ்.பி. அருண்கபிலன் கூறியதாவது: பொதுமக்கள் யாரும் இதுபோன்ற போலி இணையதள செயலிகள் மற்றும் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்வதாக கூறும் போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். மேலும், வங்கியில் இருந்து பேசுவதாக கூறுவதையோ, கடன் தருவதாக கூறி, கைப்பேசிக்கு அனுப்பும் குறுஞ்செய்திகளை நம்பி, வங்கி விவரத்தையோ அல்லது ஓடிபிக்களையோ யாரிடமும் பகிர வேண்டாம். ஒருவேளை ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்துவிட்டால், உடனடியாக, சைபா் கிரைம் போலீஸின் உதவி எண் 1900 மற்றும் இணையதள முகவரியில் புகாா் அளிக்கலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com