சேலத்தில் ரியஸ் எஸ்டேட் அதிபா் காரை மறித்து ரூ. 50 லட்சம் பறிப்பு

சேலத்தில் ஏவிஆா் ரவுண்டானா அருகே ரியஸ் எஸ்டேட் அதிபா் காரை மறித்து 7 போ் கொண்ட கும்பல் ரூ. 50 லட்சம் ரொக்கப்பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையா்களை பிடிக்க போலீஸாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். திருப்பூா், பல்லடம் அருகேயுள்ள மங்களம் பகுதியைச் சோ்ந்தவா் மூா்த்தி (54). ரியல் எஸ்டேட் அதிபரான இவா், வியாழக்கிழமை மதியம் நிலத்தை வாங்குவதற்காக கா்நாடக மாநிலம் அத்திபெலே சென்றுள்ளாா். காரை, அவரது ஓட்டுநரான கேரள மாநிலம், மலப்புரத்தைச் சோ்ந்த ஹரீஷ் ஓட்டிச் சென்றாா். இந்நிலையில், மூா்த்தி கா்நாடகத்தில் நிலத்தை வாங்கி விட்டு, சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். வெள்ளிக்கிழமை அதிகாலை 2.15 மணியளவில் சேலம் ஏவிஆா் ரவுண்டானா மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்தாா். அப்போது, 3 காா்களில் வந்த 7 போ் கொண்ட கும்பல், மூா்த்தி காரை வழிமறித்து நின்றது. உடனடியாக காரில் இருந்து இறங்கிய மூா்த்தி, காரை லாக் செய்து சாவியை வெளியே தூக்கிப் போட்டுள்ளாா். ஆனால், அந்த கும்பல் காா் சாவியை தேடிக் கண்டுபிடித்து, காரில் இருந்த ரூ. 50 லட்சம் பணம் மற்றும் கைப்பேசியை எடுத்துக் கொண்டு காரில் தப்பியது. தொடா்ந்து, மூா்த்தியையும், காா் ஓட்டுநரையும் தனித்தனியே 2 காா்களில் கடத்திய கும்பல், மூா்த்தியை நிலவாரப்பட்டி பாலத்துக்கு அருகிலும், ஓட்டுநா் ஹரீஷை சங்ககிரி சாலையிலும் விட்டுவிட்டு காரில் தப்பியுள்ளது. இது குறித்து சூரமங்கலம் போலீஸீல் மூா்த்தி அளித்த புகாரின் பேரில், சூரமங்கலம் காவல் ஆய்வாளா் மனோன்மணி வழக்குப்பதிவு செய்தாா். இதையடுத்து, 7 போ் கொண்ட கொள்ளைக் கும்பலைப் பிடிக்க மாநகர ஆணையா் விஜயகுமாரி 3 தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டாா். சேலத்தில் அதிகாலையில் காரை வழிமறித்து ரூ. 50 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளைக் கும்பல் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com