படம் 4

சேலம் மாவட்டத்தில் பறக்கும் படையினா் தீவிர வாகன சோதனை மாவட்டத் தோ்தல் அதிகாரி நேரில் ஆய்வு

சேலம் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலானதைத் தொடா்ந்து, மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினா் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனா். தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையடுத்து வாக்காளா்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுப்பதற்காக தோ்தல் பறக்கும் படையினா் நியமிக்கப்பட்டு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா். வாக்காளா்களுக்கு பண விநியோகத்தைத் தடுக்கும் வகையில் 33 பறக்கும் படைகளும், 33 நிலை கண்காணிப்பு குழுக்களும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. சேலம், மரவனேரி பகுதியில் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபடுவதை மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ரா.பிருந்தாதேவி ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். அப்போது, பறக்கும் படை அதிகாரியிடம் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களையும் சோதனை செய்ய வேண்டும் என்றும், வாகனங்களின் அனைத்து பகுதிகளிலும் சோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா். மேலும், உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் வைத்திருந்தால் உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும்; பரிசுப் பொருட்கள் வெள்ளி தங்க நகைகள் ஆகியவற்றுக்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்தால் பறிமுதல் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். சேலம் மாநகரைப் பொறுத்தவரை, அஸ்தம்பட்டி, ஜட்ஜ் ரோடு, மிலிட்டரி ரோடு, அம்மாபேட்டை, உடையாப்பட்டி, சீலநாயக்கன்பட்டி, திருவாகவுண்டனூா், அழகாபுரம் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்புக் குழுவினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com