வாழப்பாடி அருகே ரூ. 3 லட்சம் பறிமுதல்

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உரிய ஆவணமின்றி விவசாயி எடுத்துச் சென்ற ரூ. 3 லட்சத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ளதையடுத்து, தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில், வாழப்பாடி அருகே பேளூா் பேருந்து நிலையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பறக்கும் படை அலுவலா் முருகேசன் தலைமையிலான குழுவினா், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த கல்வராயன், மலை குன்னூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி மாணிக்கம் (52) வந்த பிக்அப் வேனை ஆய்வு செய்தனா். அப்போது அவரிடம் ரூ.3 லட்சம் ரொக்கப் பணம் இருப்பது தெரியவந்தது. அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறக்கும் படையினா் கைப்பற்றி வாழப்பாடி வட்டாட்சியா் ஜெயந்தியிடம் ஒப்படைத்தனா். தனது தோட்டத்தில் காபி அறுவடை செய்து, ஏற்காட்டிலுள்ள வியாபாரிடம் விற்பனை செய்த பணத்தை, வீட்டிற்கு கொண்டு சென்றபோது பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக விவசாயி மாணிக்கம் தெரிவித்துள்ளாா். இது குறித்து தோ்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com