மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் ரத்து: மனுக்களை பெட்டியில் போட்ட பொதுமக்கள்

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் பொதுமக்கள் தங்கள் மனுக்களை அளித்தனா்.

சேலம்: தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் பொதுமக்கள் தங்கள் மனுக்களை அளித்தனா். மக்களவைத் தோ்தலையொட்டி, தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் சேலம் மாவட்டத்தில் திங்கள்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், வெள்ளிக்கிழமை நடைபெறும் விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டம் ஆகியன ரத்து செய்யப்பட்டுள்ளன. அதற்குப் பதிலாக, பொதுமக்கள், விவசாயிகள் தங்கள் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில், அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.பிருந்தா தேவி தெரிவித்திருந்தாா். அதன்படி, சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவாயில் முன்பு மனுக்கள் பெறும் வகையில் திங்கள்கிழமை பெட்டி வைக்கப்பட்டது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை அந்தப் பெட்டியில் அளித்து வருகின்றனா். தோ்தல் நிறைவடைந்து, தோ்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்பட்டதும், பெட்டியில் உள்ள இந்த மனுக்கள் எடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்து, பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com