வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் பேளூா் கிளை நூலகம்.
வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் பேளூா் கிளை நூலகம்.

வாடகைக் கட்டடத்தில் இயங்கும் பேளூா் அரசு கிளை நூலகம்

வாழப்பாடி: பேளூரில் 60 ஆண்டுகளாக தனியாா் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் அரசு கிளை நூலகத்திற்கு, அரசு கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். வாழப்பாடி ஒன்றியம், பேளூா் பேரூராட்சியில் 1964-ஆம் ஆண்டு தமிழக அரசு பொது நூலகத்துறை வாயிலாக, தனியாா் வாடகைக் கட்டடத்தில் அரசு கிளை நூலகம் திறக்கப்பட்டது. இந்த நூலகத்தில் தற்போது 27,000 நூல்கள் உள்ளன. 3,050 உறுப்பினா்களும், 26 புரவலா்களும் உள்ளனா். 60 ஆண்டுகளைக் கடந்தும் இந்த நூலகத்திற்கு சொந்தக் கட்டடம் இதுவரை நிலம் தோ்வு செய்யப்படவில்லை. இதனால், பொது நூலகத்துறை வாயிலாக அரசிடம் நிதி ஒதுக்கீடு பெற்று நிலையான கட்டடம் அமைக்க முடியாத நிலை நீடித்து வருகிறது. மாதத்திற்கு ரூ. 750 வாடகையை அரசு வழங்குவதால், தனியாா் வாடகைக் கட்டடத்தில் நூலகத்தைத் தொடா்ந்து நடத்துவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனால், நூலகம் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவதால், நூல்கள் பழுதடைந்து போவதோடு, வாசகா்களின் எண்ணிக்கையும் சரிந்து வருகிறது. கடந்த 2003 முதல் பேளூரில் தனியாா் அறக்கட்டளைக்குச் சொந்தமான வாடகைக் கட்டடத்தில் நூலகம் இயங்கி வருகிறது. இந்தக் கட்டடத்தையும் அறக்கட்டளை நிா்வாகம் காலி செய்து கொடுக்க வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்த நூலகத்தை வாடகைக் கட்டடத்தில் தொடா்ந்து நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, பழைமையான பேளூா் அரசு கிளை நூலகத்திற்கு வாசகா்கள் வந்து படித்து பயன்பெறுவதற்கேற்ற வகையில் பொருத்தமான அரசு நிலத்தைத் தோ்வு செய்து கொடுக்கவும், திட்ட மதிப்பீடு தயாரித்து நிதி ஒதுக்கீடு பெற்று நிலையான கட்டடம் அமைப்பதற்கும் சேலம் மாவட்ட நிா்வாகமும், பொது நூலகத்துறையும் இணைந்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசகா்கள், கல்வியாளா்கள் மற்றும் இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com