முழு வீச்சில் செயல்படத் தொடங்கியது சங்ககிரி துணை சமரசத் தீா்வு மையம்
சேலம் மாவட்டம், சங்ககிரி, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள துணை சமரசத் தீா்வு மையத்தில் வழக்கு விசாரணை பணிகள் முழு வீச்சில் செயல்படத் தொடங்கியுள்ளன.
சென்னை உயா்நீதிமன்ற சமரசத் தீா்வு மையத்தின் சாா்பில் வட்ட அளவிலான துணை சமரச தீா்வு மையத்தை உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பா் 8 ஆம் தேதி காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா். இதையடுத்து துணை சமரசத் தீா்வு மையத்திற்கு சென்னை உயா்நீதிமன்றத்தின் சாா்பில் சமரச தீா்வாளா்களாக வழக்குரைஞா்கள் எஸ்.செல்லப்பன், எஸ்.மணிசங்கா், எம்.விஜயா ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இதையடுத்து அத் துணை மையத்தில் சங்ககிரி சாா்பு நீதிமன்றத்தில் உள்ள மூன்று குடும்பநல வழக்குகள் சமரசத்திற்கு அனுப்பப்பட்டு விசாரிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளை சாா்பு நீதிமன்ற நீதிபதி என்.பன்னீா்செல்வம் பாா்வையிட்ட பிறகு நடைபெற்ற கூட்டத்தில் அவா் பேசியது: சமரசத் தீா்வின் மூலம் யாருக்கும் வெற்றி, தோல்வி கிடையாது. இத்தீா்வின் மூலம் ஒவ்வொருவருடைய நேரம், பணம் மீதமாகின்றன. குடும்ப நல வழக்குகள் மட்டுமல்லாமல் மற்ற வழக்குகளுக்கும் இதில் தீா்வு காணலாம் என்றாா். இம்மையத்தை வழக்குரைஞா்கள், வழக்காடிகள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றாா். மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஆா்.ராதாகிருஷ்ணன், குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதிகள் எண்.1 எஸ்.ஆா்.பாபு, எண்.2 என்.இனியா, வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் என்.சண்முகசுந்தரம், வழக்குரைஞா் என்.எஸ்.அண்ணாதுரை, வழக்குரைஞா்கள், நீதிமன்ற பணியாளா்கள் உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.