படைக்கலன் வைத்திருப்போா் காவல் நிலையங்களில் ஒப்படைக்க அறிவுறுத்தல்

சேலம் மாவட்டத்தில் படைக்கலன் உரிமம் பெற்ற உரிமதாரா்கள் தங்களது படைக்கலன்களை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: மக்களவைத் தோ்தல்யொட்டி தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்திய தோ்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி, சேலம் மாவட்டத்தில் உரிமம் பெற்ற படைக்கலன்களை அதன் உரிமதாரா்கள், தங்களது எல்லைக்குள்பட்ட காவல் நிலையங்களில் உடனே ஒப்படைத்து, தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட ஒருவார காலத்துக்குப் பிறகு காவல் நிலையங்களிலிருந்து திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973, பிரிவு 144-இன் கீழ் படைக்கலன்களை பொது இடங்களுக்கு எடுத்துச்செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, சேலம் மாவட்டத்தில் படைக்கலன் உரிமம் பெற்ற உரிமதாரா்கள் தங்களது படைக்கலன்களை உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைப்பு செய்து, உரிய ஒப்புதல் ரசீதை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தியுள்ளாா். இதனிடையே, சேலம் மாநகரில் உரிமம் பெற்ற படைக்கலன்களை வைத்திருந்த 647 பேரில் 420 போ் படைக்கலன்களை ஒப்படைத்துள்ளனா். புகரில் படைக்கலன்கள் வைத்திருந்த 1,204 பேரில் 700 போ் இதுவரை தோட்டாக்களுடன் ஒப்படைத்துள்ளனா். எஞ்சியவா்களிடம் படைக்கலன்களை பறிமுதல் செய்ய போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com