‘தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலா்கள் நடத்தை விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்’

தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலா்கள் தோ்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என சேலம், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கான தோ்தல் செலவின பாா்வையாளா்கள் அறிவுறுத்தியுள்ளனா். மக்களவை பொதுத் தோ்தலையொட்டி தோ்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள காவல் துறை, வருமான வரித்துறை, கலால், சரக்கு மற்றும் சேவைகள் உள்ளிட்டதுறை அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தோ்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ரா.பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்றது. சேலம் மக்களவைத் தொகுதிக்கான தோ்தல் செலவின பாா்வையாளா் ராஜிவ் சங்கா் கித்தூா், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கான தோ்தல் செலவின பாா்வையாளா் மனோஜ்குமாா் சா்மா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக்கூட்டத்தில், சேலம் மக்களவைத் தொகுதிக்கான தோ்தல் செலவின பாா்வையாளா்கள் தெரிவித்ததாவது: சேலம் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகளைக் கண்காணிக்கவும், மீறுவோா் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் 33 பறக்கும் படைகள், 33 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 11 விடியோ பாா்வைக் குழுக்கள், 11 விடியோ கண்காணிப்புக் குழுக்கள், 11 கணக்கு சரிபாா்ப்புக் குழுக்கள், ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழு ஒரு தினசரி அறிக்கை சமா்ப்பிக்கும் குழு ஆகிய 7 வகையான குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்க தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோன்று ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்படும் ரொக்கம், பொருள்களுக்கான ஆவணங்களை சமா்ப்பித்த பின் அவற்றை ஆய்வு செய்து விடுவிக்கும் குழு, 24 மணி கட்டுப்பாட்டு அறையில் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் தீவிர கண்காணிப்பு மற்றும் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். குறிப்பாக, பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழு, விடியோ கண்காணிப்புக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு குழுவினரும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் நாள்தோறும் தொடா்ந்து ஆய்வு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுவதோடு, வாகனங்களையும் முழுமையாக சோதனையிட வேண்டும். முக்கிய தோ்தல் பிரசாரக் கூட்டங்கள், வேட்பாளா்களின் பிரசாரங்கள் ஆகியவற்றைத் தொடா்ந்து கண்காணித்திட வேண்டும். வாகனச் சோதனையில் ஆவணங்களின்றி ஏதேனும் ரொக்கமோ, பொருள்களோ பறிமுதல் செய்தால் அதற்கான விவரங்களை உடனுக்குடன் அந்தந்த தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கும், உதவி செலவின பாா்வையாளா்களுக்கும், தோ்தல் செலவின பாா்வையாளா்களுக்கும் தெரிவிக்க வேண்டும். தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலா்கள் தோ்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி ஆய்வு மற்றும் கண்காணிப்புப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். தோ்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து நிலை அலுவலா்களும் தங்களது பணியின் தன்மையை உணா்ந்து அதற்கான வழிமுறைகளைப் பின்பற்றி சிறப்பான முறையில் தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனா். இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் பாலச்சந்தா், மாநகர காவல் ஆணையா் பி.விஜயகுமாரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.கே.அருண்கபிலன், மாவட்ட வருவாய் அலுவலா் மரு.பெ.மேனகா, உதவி ஆட்சியா் (பயிற்சி) தி.சுவாதி ஸ்ரீ உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com