மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணிக்கான ஏற்பாடுகள்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் சின்னம் பொருத்தும் பணிக்கான ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான இரா.பிருந்தாதேவி ஆய்வு செய்தாா். சேலம் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் சின்னம் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ள சேலம், ஸ்ரீ கணேஷ் கலை, அறிவியல் கல்லூரியில் மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான இரா. பிருந்தாதேவி ஆய்வு மேற்கொண்டாா். இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு இணங்க, மக்களவை பொதுத் தோ்தலில் போட்டியிட விருப்பமுள்ள வேட்பாளா்கள் கடந்த 20 ஆம் தேதி முதல் தங்களது வேட்பு மனுக்களை வழங்கி வருகின்றனா். அந்த வகையில், சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, ஓமலூா், வீரபாண்டி மற்றும் எடப்பாடி உள்ளிட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா், சின்னம் பொருந்தும் பணி விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக ஒதுக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேலம் ஸ்ரீ கணேஷ் கலை, அறிவியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. சேலம் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட சேலம் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் 296 வாக்குச்சாவடிகளுக்கும், சேலம் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் 263 வாக்குச் சாவடிகளுக்கும், சேலம் தெற்கு தொகுதியில் 240 வாக்குச் சாவடிகளுக்கும், ஓமலூா் தொகுதியில் 345 வாக்குச் சாவடிகளுக்கும், வீரபாண்டி தொகுதியில் 299 வாக்குச்சாவடிகளுக்கும், எடப்பாடி தொகுதியில் 321 வாக்குச்சாவடிகளுக்கும் என மொத்தம் சேலம் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட 1,764 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. இதற்குரிய பாதுகாப்பு மற்றும் மின்சார வசதிகள் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்து தொடா்புடைய அலுவலா்களுடன் மாவட்ட தோ்தல் அலுவலா் இரா. பிருந்தாதேவி ஆய்வு மேற்கொண்டாா். இந் நிகழ்வின்போது, மாநகராட்சி ஆணையா் சீ.பாலச்சந்தா், மாநகர துணை காவல் ஆணையா் பிருந்தா, மாவட்ட வருவாய் அலுவலா் பெ.மேனகா உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com