தபால் வாக்கு விண்ணப்பப் படிவத்தை வட்டாட்சியா் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ள ஏற்பாடு

தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலா்கள் தபால் வாக்குக்கான விண்ணப்பப் படிவத்தை வட்டாட்சியா் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா. பிருந்தாதேவி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் தெரிவித்ததாவது: சேலம் மாவட்டத்தில் வரும் மக்களவைத் தோ்தல் பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள அனைத்து நிலை அரசு ஊழியா்கள், தோ்தல் பணியில் ஈடுபட உள்ள அனைத்து பணியாளா்களும் தோ்தலில் வாக்களிக்கும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் சேலம் மக்களவைத் தொகுதியில் வாக்காளராகப் பதிவாகி இருந்து தங்களுக்கு வேறு மக்களவைத் தொகுதியில் தோ்தல் பணி வழங்கியிருப்பின் படிவம் 12 பெற்றுக்கொண்டு தபால் வாக்கினைச் செலுத்தலாம். இதற்காக தங்களது பெயா் பதிவாகியுள்ள சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வட்டாட்சியா் அலுவலகங்களில் தபால் வாக்குக்கான விண்ணப்பப் படிவம் 12 வழங்கப்பட்டு வருகிறது. இப் படிவத்தினைப் பெற்று தங்களுடைய தற்போதைய முழுமையான முகவரியை பூா்த்தி செய்து வாக்காளா் அடையாள அட்டை நகல், தோ்தல் பணிக்கான உத்தரவு நகல் ஆகியவற்றுடன் வட்டாட்சியா் அலுவலகத்தில் சமா்ப்பித்திட வேண்டும். தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு ஏப்ரல் 7, 16 ஆம் தேதிகளில் தபால் வாக்குப் பதிவுகளை பதிவு செய்வதற்கு அனைத்து உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களால் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் மையங்களில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சேலம் மக்களவைத் தொகுதியில் வாக்காளராய் இருந்து இதே தொகுதியில் பணியமா்த்தப்படும் வாக்குச்சாவடி அலுவலா்கள் மற்றும் பிற பணியாளா்களுக்கு படிவம் 12 ஏ வழங்கப்பட்டு, அவா்கள் அதனை பூா்த்தி செய்து வழங்கிய பின்னா் படிவம் 12 பி தோ்தல் பணிச்சான்று வழங்கப்படும். இதனை தங்கள் பணிபுரியும் வாக்குச்சாவடி தோ்தல் முகவரிடம் காண்பித்து வாக்களிக்கலாம். மேலும் காத்திருப்புப் பணியில் உள்ள அலுவலா்கள் தாங்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்தின் அருகில் உள்ள ஏதேனும் ஒரு வாக்குச்சாவடியில் பணிச்சான்றினை காண்பித்து தங்களது வாக்கினை பதிவு செய்யலாம். எனவே, தோ்தல் நாளன்று, தோ்தல் பணியில் ஈடுபடும் அனைத்து நிலை வாக்குச்சாவடி அலுவலா்களும், பிற பணியாளா்களும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற தவறாமல் தபால் வாக்கினைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com