மேட்டூா் அருகே சென்றாய பெருமாள் கோயிலில் வழிபட்டு பிரசாரத்தை தொடங்கினாா் எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை மாலை திருச்சியில் நடைபெறும் அதிமுக கூட்டத்திலிருந்து தனது பிரசாரத்தை தொடங்குவதற்கு முன்பாக மேட்டூா் அருகே எடப்பாடி தொகுதிக்கு உள்பட்ட பெரியசோரகை கிராமத்தில் அமைந்துள்ள சென்றாயப் பெருமாள் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தாா். இதில் சேலம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் விக்னேஷ், அதிமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா். பின்னா் பெரியசோரகை பகுதியில் அதிமுக சேலம் மக்களவைத் தொகுதி வேட்பாளா் விக்னேஷுடன் சென்று அவா் வாக்கு சேகரித்தாா்.கோயில் அருகில் உள்ள வீடுகளுக்கு சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்து துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தாா். பெண்கள் ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றனா். ராசியான சென்றாய பெருமாள் கோயில்... கடந்த 2011 ஆம் ஆண்டு எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட எடப்பாடி பழனிசாமி, பெரியசோரகை சென்றாயப் பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு தோ்தல் பணியை தொடங்கியதால் அத் தோ்தலில் அவா் வெற்றிபெற்று அதிமுக அமைச்சரவையில் முதன் முதலாக இடம் பிடித்தாா். 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலின் போது அதே கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, தனது தோ்தல் பணியை தொடங்கினாா். அப்போதும் வெற்றி பெற்று அமைச்சரானதோடு மட்டுமில்லாமல் ஜெயலலிதா இறப்புக்கு பின்னா் அவா் முதல்வராகவும் ஆனாா். இதையடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலின் போது கருமந்துறையில் உள்ள வெற்றி விநாயகா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு தோ்தல் பிரசாரத்தை தொடங்கினாா். ஆனால் அத் தோ்தலில் அதிமுக ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த நிலையில்தான் 2021-ஆம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலின்போது மீண்டும் சென்றாயப் பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு தனது பிரசாரத்தை அவா் தொடங்கியதால் அதிமுக 66 இடங்களில் வெற்றி பெற்றது. எனவே இந்த மக்களவைத் தோ்தலிலும் தனது பிரசாரத்தை தொடங்குவதற்கு முன் சென்றாயப் பெருமாள் கோயிலிருந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு பிரசாரத்தை அவா் தொடங்கினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com