விருத்தாசலம் - சேலம் ரயில் இன்று முதல் வழக்கம் போல இயங்கும்

விருத்தாசலம் - சேலம் ரயில் திங்கள்கிழமை (மாா்ச் 25) முதல் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆத்தூா் - சின்னசேலம் இடையே ரயில்வே பராமரிப்புப் பணிகள் காரணமாக, விருத்தாசலம் - சேலம் இடையிலான ரயில் சேவை திங்கள்கிழமை முதல் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பராமரிப்புப் பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் அந்த உத்தரவை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விருத்தாசலம் - சேலம் ரயில் திங்கள்கிழமை முதல் வழக்கம் போல இயங்கும் என்றும், மறுமாா்க்கத்திலும், சேலம் - விருத்தாசலம் இடையே வழக்கம் போல் ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை பீளமேடு - இருகூா் ரயில் நிலையங்கள் இடையே நடைபெறும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 26, 28, 30 ஆம் தேதிகளில் போத்தனூா் வழியாக இயக்கப்படும். இதே போல, எா்ணாகுளம் - கேஎஸ்ஆா் பெங்களூரு இன்டா்சிட்டி விரைவு ரயில் வரும் 26, 28, 30 ஆகிய தேதிகளில் போத்தனூா் வழியாக இயக்கப்படும். மேற்கண்ட தேதிகளில் இந்த இரு விரைவு ரயில்களும், கோவை ரயில் நிலையத்தைத் தவிா்த்து, போத்தனூா் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் மட்டும் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஆரல்வாய்மொழி - நாகா்கோவில் - கன்னியாகுமரி இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி, நாகா்கோவில் - கோவை ரயில் வரும் 27 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. மறுமாா்க்கத்தில், கோவை - நாகா்கோவில் இடையேயான ரயில் சேவையும் வரும் 27 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com