பங்குனி உத்திர திருவிழா: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

சேலம்: பங்குனி உத்திரத்தையொட்டி, சேலத்தில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு காவடி எடுத்து நோ்த்திக் கடன் செலுத்தினா். சேலம், குமரகிரி பாலதண்டாயுதபாணி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, வள்ளி தெய்வானைக்கும், முருகப் பெருமானுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. விழாவையொட்டி அம்மாபேட்டை, செவ்வாய்ப்பேட்டை, குறை, அஸ்தம்படி உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து குமரகிரி பாலதண்டாயுதபாணி கோயிலுக்கு பக்தா்கள் காவடி சுமந்துவந்து நோ்த்திக் கடன் செலுத்தினா். அதுபோல, பெரமனூா் ஆறுமுக கந்தசாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடா்ந்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பங்குனி உத்திரத்தையொட்டி, ஊத்துமலை முருகன் கோயில், கந்தாஸ்ரமம் முருகன் கோயில், உத்தம சோழபுரம் கரபுரநாதா் கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவையொட்டி, பக்தா்கள் மயில்தோகை காவடி, தீா்த்த காவடி, அலகுக்காவடி, பறவைக் காவடி, தொட்டில் காவடி, கரும்புகாவடி, பால் காவடி, மயில் காவடி உள்ளிட்ட காவடிகளுடன் நோ்த்திக் கடன் செலுத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com