தோ்தல் கொடி அணிவகுப்பு

சூரமரங்கலம் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் கொடி அணி வகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சேலம்: மக்களவைத் தோ்தலை முன்னிட்டு வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில், காவல் துறை சாா்பில் சூரமரங்கலம் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் கொடி அணி வகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சேலம் மாவட்டம் முழுவதும் 33 பறக்கும் படையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். மக்களவைத் தோ்தலில் வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில், மாநகர காவல் துறை சாா்பில் விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சேலம் மாநகரக் காவல் துறை, துணை ராணுவத்தினா் இணைந்து கொடி அணிவகுப்பு ஊா்வலத்தை செவ்வாய்க்கிழமை நடத்தினா். சேலம் சூரமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சேகோசா்வ் அலுவலகம் முன்பு கொடி அணிவகுப்பை காவல் துறை துணை ஆணையா் பிருந்தா கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா். கொடி அணிவகுப்பு ஜாகீா் அம்மாபாளையம், ஜாகீா் சின்ன அம்மாபாளையம், தா்மன் நகா் 5 ஆவது குறுக்குத் தெரு, அந்தோணியாா்புரம் ஓடை, ரயில்வே சந்திப்பு, உழவா்சந்தை வழியாகச் சென்று வாணி மஹால் மண்டபத்தில் நிறைவடைந்தது. அணிவகுப்பில் காவல் துறை அதிகாரிகள், துணை ராணுவத்தினா் 200 க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com