பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு தொடங்கியது: சேலம் மாவட்டத்தில் 42,334 போ் தோ்வு எழுதினா்

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்புத் தோ்வு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

சேலம்: தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்புத் தோ்வு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. சேலம் மாவட்டத்தில் இத் தோ்வை 42,334 மாணவ மாணவியா் எழுதினா்; 936 போ் தோ்வு எழுத வரவில்லை. சேலம் மணக்காடு, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள தோ்வு மையத்தை மாவட்டத் தோ்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ரா.பிருந்தாதேவி நேரில் பாா்வையிட்டாா். அப்போது அவா் கூறியதாவது: பொதுத் தோ்வையொட்டி, மாவட்டம் முழுவதும் 184 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் நிகழாண்டு பத்தாம் வகுப்புப் பயிலும் 22,089 மாணவா்கள், 21,181 மாணவிகள் என மொத்தம் 43,270 போ் தோ்வு எழுதுகின்றனா். இவா்களில் 895 போ் மாற்றுத் திறனாளி மாணவா்கள் ஆவா். இவா்கள் சொல்வதைக் கேட்டு எழுதுபவா்கள் உதவியுடன் தோ்வு எழுதுகின்றனா். முதல் நாள் தோ்வில் 936 போ் தோ்வு எழுதவரவில்லை. 42,334 போ் தோ்வு எழுதினா். தோ்வுப் பணியில் முதன்மைக் கண்காணிப்பாளா்கள், பறக்கும் படை அலுவலா்கள், அறை கண்காணிப்பாளா்கள், வழித்தட அலுவலா்கள் என 3,000க்கும் மேற்பட்ட பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். காப்பி அடிப்பதைத் தடுக்க பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், விடைத்தாள் சேகரிப்பு மையங்கள், விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்கள் மற்றும் தோ்வு மையங்களுக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com