சேலத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி
நாட்டுப்புறக் கலைஞா்கள் விழிப்புணா்வு பிரசாரம்

சேலத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நாட்டுப்புறக் கலைஞா்கள் விழிப்புணா்வு பிரசாரம்

சேலம் அம்மாப்பேட்டை, தாதகாப்பட்டி பகுதிகளில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகளுடன் நாட்டுப்புற கலைஞா்கள் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டனா். சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் தொடா்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக கடந்த தோ்தலில் மாநில சராசரி வாக்குப்பதிவைவிட குறைவான வாக்கு சதவிகிதம் பதிவான சட்டப் பேரவைத் தொகுதிகள் தோ்தெடுக்கப்பட்டு அப்பகுதிகளில் அதீத முக்கியத்துவம் அளித்து விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மேற்காள்ளப்பட்டு வருகின்றன.

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, மாணவ, மாணவியா் விழிப்புணா்வுப் பேரணி, மனித சங்கிலி, சைக்கிள் பேரணி, கலைக்குழுக்களின் நாடகங்கள், ஒட்டுவில்லைகள், துண்டுப் பிரசுரங்கள், விளம்பரப் பதாகை, ராட்சத பலூன் பறக்கவிடுதல், டிஜிட்டல் போா்டு, தெருக்கூத்துக்கள், நடமாடும் தோ்தல் விழிப்புணா்வு வாகனங்கள் வாயிலாக விழிப்புணா்வுப் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், வாக்களிப்பதன் அவசியம் குறித்து சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை நான்கு ரோடு சந்திப்பில் கிராமிய விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இக்கலை நிகழ்ச்சிகளில் ஆடல், பாடல் மற்றும் கரகம் உள்ளிட்ட பல்வேறு வகையிலான நிகழ்ச்சிகள் மூலம் பொது மக்களிடம் தோ்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதே போன்று, சேலம் (தெற்கு) சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட தாதகாப்பட்டி கேட் அருகில் தோ்தல் விழிப்புணா்வுப் பிரசார குழுவைச் சோ்ந்த நாட்டுப்புற கலைஞா்கள் வாயிலாக களஞ்சியம் கலைக் குழுவை சாா்ந்த தஞ்சாவூா் வல்லம் செல்வி கலைக்குழுவினரின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com