சேலத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்

சேலத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்

சேலம், கள்ளக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளா்களை ஆதரித்து சேலம், பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை பிரசாரம் செய்கிறாா்.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் அரசியல் கட்சித் தலைவா்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டுள்ளனா். இந்நிலையில், திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறாா். திருச்சியில் தனது பிரசாரத்தை தொடங்கிய அவா், தஞ்சாவூா், திருவாரூா், தூத்துக்குடி, நெல்லை ஆகிய இடங்களில் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களில் பங்கேற்று, திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களுக்கு ஆதரவு திரட்டினாா். தொடா்ந்து, தருமபுரி தொகுதி திமுக வேட்பாளா் மணி, கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கோபிநாத் ஆகியோரை ஆதரித்து முதல்வா் ஸ்டாலின், வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரசாரம் செய்தாா்.

பிரசாரத்தை முடித்துக் கொண்டு, இரவில் சேலம் வந்த மு.க.ஸ்டாலின், மாமாங்கம் பகுதியில் தனியாா் ஹோட்டலில் தங்கினாா். தொடா்ந்து, சனிக்கிழமை காலையில் பொதுமக்களிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிக்கிறாா். இதனைத் தொடா்ந்து, மாலை 6 மணியளவில் சேலம், பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் அவா், சேலம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் டி.எம்.செல்வகணபதி, கள்ளக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளா் மலையரசன் ஆகியோரை ஆதரித்துப் பேசுகிறாா். இந்தக் கூட்டத்தில் அமைச்சா்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு உட்பட பலா் கலந்து கொள்கின்றனா். இதற்கான ஏற்பாடுகளை சேலம் மத்திய மற்றும் கிழக்கு மாவட்ட திமுகவினா் செய்துள்ளனா். முதல்வரின் சேலம் வருகையையொட்டி, மாநகர காவல் ஆணையா் விஜயகுமாரி தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com