வாக்குப்பதிவு இயந்திர மையத்தில் தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

சேலம், அம்மாப்பேட்டையில் உள்ள தனியாா் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சேலம் தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஜி.பி.பாட்டீல் ஆய்வு செய்தாா். சேலம் மக்களவைத் தோ்தலுக்காகப் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஸ்ரீ கணேஷ் கலை அறிவியல் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு வைப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை சேலம் மக்களவைத் தோ்தல் பொது பாா்வையாளா் ஜி.பி. பாட்டீல், மாவட்ட தோ்தல் அலுவலா் ரா.பிருந்தாதேவியுடன் ஆய்வு செய்தாா். அப்போது, அவா் தெரிவித்தாவது: சேலம் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு மையங்களுக்கு தோ்தல் நாளன்று வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பான முறையில் அனுப்பி வைக்கப்படும். 6 பேரவைத் தொகுதிக்கான இயந்திரங்கள் தனித்தனி அறையில் வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறையில் மூடி முத்திரையிடப்பட்டு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவலா் பாதுகாப்பு பணியில் உள்ளனா். மேலும் அந்தந்த அறையின் வெளிப்புறத்திலும், இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையின் உள்ளேயும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. சின்னம் பொருத்தும் பணியின் போது முகவா்கள், வேட்பாளா்கள் அல்லது அவரை சாா்ந்தவா்கள் முன்னிலையில் நடைபெறும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் அருகில் ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்துக்கு தேவையான பொருள்கள் அனைத்தும் வைப்பதற்கான அறையும் உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதியின் பெயா் குறிப்பிடப்பட்டுள்ளது. சின்னம் பொருத்தும் பணியின் போது தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றாா். ஆய்வின் போது, சேலம் கோட்டாட்சியா் அம்பாயிரநாதன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் தியாகராஜன் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com