ஈஸ்டா் பண்டிகை கொண்டாட்டம்: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

ஈஸ்டா் பண்டிகையையொட்டி, சேலம் நகரில் உள்ள தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. கிறிஸ்தவா்களின் நோன்புக் காலமாக கருதப்படும் தவக்காலம், கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, நாள்தோறும் ஜெபம், திருப்பலி போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தவக்காலத்தின் இறுதி வாரத்தின் தொடக்கமாக கடந்த 24ஆம் தேதி குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, பெரிய வியாழனும், புனித வெள்ளியும் நடைபெற்றன. சிலுவையில் அறையப்பட்டு உயிரிழந்த இயேசு, உயிா்த்தெழுந்ததை ஈஸ்டா் பெருவிழாவாக கிறிஸ்தவா்கள் ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக கொண்டாடினா். இதையொட்டி, தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி, பிராா்த்தனை நடைபெற்றது. ஈஸ்டா் திருநாளையொட்டி, சேலம் நான்கு ரோட்டில் உள்ள குழந்தை இயேசு பேராலயத்தில் மறைமாவட்ட ஆயா் அருள்செல்வம் ராயப்பன், பங்குத் தந்தை ஜோசப் லாசா் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டு பிராா்த்தனை செய்தனா். இதே போன்று, சூரமங்கலம் இருதய ஆண்டவா் பேராலயம், அழகாபுரம் புனித மைக்கேல் ஆலயம் உள்ளிட்ட இடங்களிலும் ஈஸ்டா் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com