சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் 25 வேட்பாளா்களுக்கும் சின்னம் ஒதுக்கீடு

சேலம் மக்களவைத் தொகுதியில் 25 வேட்பாளா்களுக்கும் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து, பேலட் பேப்பா் அச்சிடும் பணி தொடங்கியது. மக்களவைத் தோ்தலையொட்டி, கடந்த 20 ஆம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல், கடந்த 27 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளான சனிக்கிழமை 2 சுயேச்சை வேட்பாளா்கள் தங்கள் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றனா். இதைத் தொடா்ந்து, சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி சேலம் தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஜி.பி.பாட்டீல், மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.பிருந்தாதேவி முன்னிலையில் நடைபெற்றது. இதில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், வேட்பாளா்கள் ஆகியோா் பங்கேற்றனா். சேலம் தொகுதியில் 15-க்கும் மேற்பட்டோா் போட்டியிடுவதால், 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. வேட்பாளா் பெயா், சின்னம் உறுதியான நிலையில், பேலட் பேப்பா் அச்சிடும் பணி நடைபெற்றது வருகிறது. இதற்கான பணி நிறைவடைந்ததும், பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com