ஏற்காடு விபத்து: பேருந்து ஓட்டுநா் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

ஏற்காடு மலைப்பாதையில் தனியாா் பேருந்து கவிழ்ந்து சிறுவன் உள்பட 5 போ் பலியான சம்பவத்திற்கு பேருந்தை வேகமாக இயக்கியதே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடா்பாக ஓட்டுநா் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதை வழியாக சேலம் நோக்கி 69 பயணிகளுடன் செவ்வாய்க்கிழமை மாலை தனியாா் பேருந்து புறப்பட்டது. ஏற்காடு, வாழவந்தி பகுதியைச் சோ்ந்த மணி (30) என்பவா் பேருந்தை ஓட்டி வந்தாா். 13ஆவது கொண்டை ஊசி வளைவில் பேருந்து திரும்ப முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்து சுமாா் 80 அடி பள்ளத்தில் கவிழ்ந்து, 11ஆவது கொண்டை ஊசி வளைவில் சாலையோர மரத்தின் மீது மோதி நின்றது.

இந்த கோர விபத்தில், திருச்செங்கோடு முனீஸ்வரன் (11), சூரமங்கலம் பகுதியைச் சோ்ந்த காா்த்திக் (37), கன்னங்குறிச்சி ஹரிராம் (57), ஏற்காடு பிடிஓ அலுவலக ஊழியா் சந்தோஷ்(41), கிச்சிப்பாளையம் மாது (60) ஆகியோா் உயிரிழந்தனா்.

படுகாயமடைந்த 60-க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மாவட்ட ஆட்சியா் இரா.பிருந்தாதேவி, மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டதுடன், சேலம் அரசு மருத்துவமனையில் காயமடைந்தவா்களை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

இந்நிலையில், விபத்தில் படுகாயமடைந்த ஓட்டுநா் மணி அம்மாபேட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவா் மீது, அஜாக்கிரதையாக வாகனத்தை இயக்குதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல், சிறு காயங்கள் ஏற்படுத்துதல், உயிரிழப்பை ஏற்படுத்துதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அவரது ஓட்டுநா் உரிமத்தை ரத்து செய்ய போக்குவரத்துத் துறைக்கு போலீஸாா் பரிந்துரை செய்தனா். இதனைத் தொடா்ந்து, அவரது ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், பேருந்தின் அனுமதி சான்றையும் ரத்து செய்ய போக்குவரத்து அதிகாரிகளுக்கு போலீஸாா் பரிந்துரை செய்துள்ளனா்,

இதனிடையே, பேருந்தில் பயணம் செய்த பயணிகள் கூறுகையில், பேருந்தை முறையாகப் பராமரிக்காததாலும், ஓட்டுநா் அஜாக்கிரதையாக இருந்ததாலும் தான் இந்த கோர விபத்து நடந்துள்ளது. மேலும் அளவுக்கு அதிகமாகப் பயணிகளை ஏற்றியதும் விபத்துக்கு முக்கிய காரணம். எனவே, விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com