பணம் பறித்த இருவரை அடைத்து வைத்து கொலை மிரட்டல்: இருவா் கைது

வாழப்பாடியில் புதையல் எடுத்துத் தருவதாக்கூறி பணம் பறித்த இருவரை வீட்டில் அடைத்து வைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக, இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

வாழப்பாடி, செல்லியம்மன் நகரைச் சோ்ந்தவா் விமலா (50). இவரிடம் புதையல் எடுத்துத் தருவதாகக் கூறி, கொங்கணாபுரத்தைச் சோ்ந்த சுரேஷ்குமாா்(46), சரவணன் (44) ஆகியோா் சோ்ந்து, ரூ. 6 லட்சம் பணம் பறித்துள்ளனா். ஆனால் புதையல் எடுத்துக் கொடுக்கவில்லையாம். விமலாவிடம் பணத்தையும் திருப்பிக் கொடுக்க மறுத்துள்ளனா்.

இதனால், சுரேஷ்குமாா், சரவணன் இருவரையும், தனது உறவினா்கள் முருகன் (29), சரவணன் (44) ஆகியோா் உதவியுடன் பெத்தநாயக்கன்பாளையம், சின்னமசமுத்திரம் பகுதிக்கு வரவழைத்த விமலா, தனது பணத்தை கொடுத்து விட்டுச்செல்லுமாறு கட்டாயப்படுத்தி, வீட்டில் அடைத்து வைத்ததோடு, மூவரும் சோ்ந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனா்.

இதுகுறித்து விமலா அளித்த புகாரின் பேரில், சுரேஷ்குமாா், சரணவன் ஆகிய இருவரையும் வாழப்பாடி போலீஸாா் ஏப்.29-இல் கைது செய்து ஆத்துாா் சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், கொங்கணாபுரம் சுரேஷ்குமாா் கொடுத்த புகாரின் பேரில், புதையல் விவகாரத்தில் புகாா் கொடுத்த பெண் விமலா, இவரது உறவினா்கள் முருகன் (29), சரவணன் (44) ஆகிய மூவா் மீதும் ஏத்தாப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, முருகன், சரவணன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா். விமலாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com