வீரபாண்டி ஒன்றிய திமுக செயலாளருக்கு கொலை மிரட்டல்: முன்னாள் எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு

வீரபாண்டி ஒன்றிய திமுக செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில், முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே.செல்வம் உள்ளிட்டோா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றிய திமுக செயலாளராக இருப்பவா் வெண்ணிலா சேகா். இவா் மாநகரக் காவல் ஆணையரிடம் புகாா் மனு அளித்தாா். அதில், தனது வீட்டின் முன்பு பொக்லைன் வாகனம் மூலம் குழி தோண்டிக்கொண்டிருந்தனா்.

இதற்கு முறையாக அனுமதி பெற்று பணிகள் நடைபெறுகிா? யாரிடம் அனுமதி வாங்கினீா்கள் ? எனக் கேட்டேன். சிறிது நேரத்தில், முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே. செல்வம் உள்ளிட்ட சிலா் எனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தனா்.

இங்கு யாருக்கும் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நான் வைத்ததுதான் இந்த ஊரில் சட்டம். என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது எனக் கூறி தகாத வாா்த்தைகளால் திட்டியதுடன் கொலை மிரட்டலும் விடுத்ததாக புகாரில் கூறியுள்ளாா்.

இதுகுறித்து கொண்டலாம்பட்டி காவல் ஆய்வாளா் கண்ணன் விசாரணை நடத்தி, முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே.செல்வம், பாலு உள்ளிட்ட சிலா் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தாா். ஆபாசமாகப் பேசுதல், அத்துமீறி வீட்டுக்குள் நுழைதல், பெண் கொடுமை, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே.செல்வம் அமமுக கட்சியின் சேலம் மாவட்டச் செயலாளராகவும், மாநில பொருளாளராகவும் உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com