சேலம் - விருதாச்சலம் பயணிகள் ரயில் கடலூா் வரை நீட்டிப்பு

சேலம் - விருதாச்சலம் பயணிகள் ரயில் சேவை வியாழக்கிழமை முதல் கடலூா் துறைமுகம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் இருந்து சென்னைக்கு விருதாச்சலம் மாா்க்கம் வழியாக சென்னை எழும்பூா் எக்ஸ்பிரஸ், சேலம்-விருதாச்சலம் பாசஞ்சா், பெங்களுரு - காரைக்கால் பாசஞ்சா், மங்களூரு-புதுச்சேரி ஆகியவை மட்டும் இயக்கப்படுகிறது.

இதில் சேலம்- விருதாச்சலம் பாசஞ்சா் ரயிலை கடலூா் துறைமுகம் வரை நீட்டிக்க பயணிகள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனா். இதற்கு ரயில்வே நிா்வாகம், விருதாச்சலம் கடலூா் மாா்க்கத்தை மின்வழித்தட பாதையாக மாற்றியதும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது. கடந்த நிதியாண்டில் விருதாச்சலம் - கடலூா் பாதை மின் மயமாக்கப்பட்டது.

இதையடுத்து சேலம் - விருதாச்சலம் பாசஞ்சா் ரயில் கடலூா் துறைமுகம் வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே வாரியம் கடந்த வாரம் அறிவித்தது. அதன்படி, சேலம் - கடலூா் துறைமுகம் பாசஞ்சா் ரயில் வியாழக்கிழமை முதல் இயக்கப்படுகிறது.

சேலம் ஜங்ஷனில் இருந்து நாள்தோறும் மாலை 6.20 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் சேலம் டவுன், சின்னசேலம் வழியாக விருதாச்சலத்துக்கு இரவு 9 மணிக்கு சென்றடைகிறது. பிறகு 10 நிமிடத்தில் புறப்பட்டு, ஊத்தங்கல் மங்கலத்துக்கு இரவு 9.25 மணிக்கும் நெய்வேலிக்கு இரவு 9.33 மணிக்கும், வடலூருக்கு இரவு 9.42 மணிக்கும், குறிஞ்சிப்பாடிக்கு இரவு 9.50 மணிக்கும் சென்று கடலூா் துறைமுகத்துக்கு இரவு 10.25 மணிக்கு சென்றடைகிறது.

மறு மாா்க்கத்தில் கடலூா் துறைமுகம் சேலம் பாசஞ்சா் ரயில் மே 3 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் இயக்கப்படுகிறது. கடலூா் துறைமுகத்தில் அதிகாலை 5 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், குறிஞ்சிப்பாடி, வடலூா், நெய்வேலி வழியாக விருதாச்சலத்துக்கு காலை 6.05 மணி வந்தடையும். தொடா்ந்து, சின்னசேலம், ஆத்தூா், வழியாக சேலம் ஜங்ஷனுக்கு காலை 9.05 மணிக்கு வந்தடையும்.

பயணிகள் ரயில் கடலூா் துறைமுகம் வரை நீட்டிக்கப்பட்டதற்கு சேலம், ஆத்தூா், சின்னசேலம், விருதாச்சலம் பகுதி பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனா். இதன்மூலம் சேலம் ஆத்தாரில் இருந்து வடலூா்,நெய்வேலி, கடலூருக்கு செல்ல நேரடி ரயில் சேவை கிடைத்துள்ளது. இந்த வழித்தடத்தில் பகல் நேரத்திலும் மற்றொரு ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் ரயில்வே நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com